தவணைத் தொகையை வாங்கச் சென்ற முன்னணி நிதி நிறுவனம் ஒன்றின் முகவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் வென்னப்புவையில் இடம்பெற்றுள்ளது.

பொரெல்லஸ்ஸ பகுதியைச் சேர்ந்த ஒருவர், மோட்டார் சைக்கிள் வாங்க நிதி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்றுள்ளார். ஆரம்பத்தில் தவணைக் கட்டணத்தை ஒழுங்காகச் செலுத்தி வந்த அவர், தொடர்ச்சியாகச் சில மாதங்கள் கொடுப்பனவைச் செலுத்தத் தவறிவிட்டார்.

இது குறித்த விளக்கத்தைக் கொடுக்கவும் அவர் மறுத்ததையடுத்து அவரது மோட்டார் சைக்கிளை மீளப் பெற்றுக்கொள்ள நிதி நிறுவனம் முடிவுசெய்தது.

அதன்படி, நேற்று (29) பகல் குறித்த நபரின் வீட்டுக்குச் சென்ற முகவர், மோட்டார் சைக்கிளை எடுத்து வர முற்பட்டார்.

அப்போது நபரும் மற்றொருவரும் சேர்ந்து முகவரைக் கடுமையாகத் தாக்கினர். இதனால் கடும் காயங்களுக்கு உள்ளான முகவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தாக்குதல் நடத்திய இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.