ஊவா , மத்திய , சப்ரகமுவ மாகாணங்களில் அடுத்த 24 மணித்தியாலங்களில்  150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 

ஊவா, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அம்பாறை , மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்கலாமென குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அருகிலுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாகவே நாடெங்கிலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

இதேவேளை, நாட்டின் வடபாகத்திலும், அம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டங்களிலும் மணிக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.