அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட  அட்டன் மல்லியப்பு பிரதேச பகுதியில் இன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வீடொன்று தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், மற்றுமொரு வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது.

இந்த இரு வீடுகளிலும் இருந்த 8 பேர் தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில்  தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

இத் தீக்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படாத போதிலும் சமையல் எரிவாயுவின் கசிவின் காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் என பிரதேசவாசிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். 

தீ ஏற்பட்ட போது வீட்டில் யாரும் இல்லை எனவும், பின்னர் வீடு எரிவதைக் கண்டு கூச்சலிட்டதாகவும், அதன் பிறகு  அயலவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள்,  உடுதுணிகள் மற்றும் பாடப் புத்தகங்கள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. 

இதேவேளை, சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.