இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் மர்ம நபர்கள் இளம்பெண்ணை கடத்துவதற்காக பொலிஸ் வாகனத்தை பயன்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்களில் குற்றச் செயல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பாலியல் தொல்லை, கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் நாள் தோறும் பலர் கைது செய்யப்படுகின்றனர்.

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம், பன்னா மாவட்ட காவல் நிலையத்திற்கு  அழைப்பை ஏற்படுத்திய  மர்ம நபர்கள், விபத்து நடந்திருப்பதாக அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், விபத்தில் சிக்கியவரை மீட்க அவர் அருகில் சென்றுள்ளனர். சற்றும் எதிர்பாரா விதமாக, அடிபட்ட நபர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கியை நீட்டியுள்ளார்.

செய்வதறியாது திகைத்த பொலிஸாரை, மர்ம நபர் மற்றும் அவருடன் வந்த 4 நபர்கள் சேர்ந்து  கட்டி பொலிஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். அத்தோடு இல்லாமல் பொலிஸ் வாகனத்தை பயன்படுத்தி, இளம்பெண் ஒருவரையும் அந்த மர்ம நபர்கள் கடத்தியுள்ளனர்.

பின்னர் மர்ம நபர்கள் பொலிஸாரையும், பொலிஸ் வாகனத்தையும் விடுவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் இரண்டு தனிப்படை அமைத்து மர்ம நபர்கள் கடத்திய  பெண்ணையும், அவரை கடத்தியவர்களையும் தேடி வருகின்றனர்.