சவுதி அரேபியாவின் மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த மூத்த இளவரசர் அல்-வலீத் பின் தலால் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.

சவுதி அரேபியாவில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது. அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர்களில் ஒருவர் குடும்ப உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு அடிப்படையில் மன்னராக தேர்வு செய்யப்படுகிறார்.

அதன் அடிப்படையில் தற்போது மன்னர் சல்மான் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. அவரது மகன் முகமது பட்டத்து இளவரசராக உள்ளார். சவுதியின் அடுத்த மன்னராக முகமது தேர்வு செய்யப்படக்கூடும் என்று தெரிகிறது.

இதனிடையே பட்டத்து இளவரசர் முகமதுவுக்கு எதிராக மூத்த இளவரசரும் கோடீஸ்வரருமான அல்-வலீத் பின் தலால் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தப் பின்னணியில் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் அல்-வலீத் உட்பட 11 மூத்த இளவரசர்கள், தொழிலதிபர்கள் என 38 பேர் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நட்சத்திர ஓட்டலில் சிறைவைக்கப்பட்டனர்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு மூத்த இளவரசர் அல்-வலீத் உட்பட அனைவரும் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

அரசுக்கு கணிசமான தொகையை அபராதமாக செலுத்திய பிறகு அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பட்டத்து இளவரசர் முகமதுவுக்கு எதிராக செயல்பட மாட்டோம் என்று அல்-வலீத் உறுதி அளித்த பிறகே அவர் விடுவிக்கப்பட்டிருப்பதாக சவுதி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.