கொலம்பியாவின் கரீபியன் (Caribbean) பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ள இரட்டைக் குண்டு வெடிப்புகளில், பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கரீபியன் பிராந்தியத்திலுள்ள 4 பொலிஸ் நிலையங்களை இலக்குவைத்து நேற்று  இரவு இரு குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், பொலிவர் மாகாணத்திலுள்ள பொலிஸ் நிலையத்தை இலக்குவைத்து இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பில், இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்று சுமார் 4 மணித்தியாலங்களின் பின்னர் சொலிடட் (Soledad) பகுதியில் இடம்பெற்றுள்ள மற்றுமொரு குண்டு வெடிப்பில், 7 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்குவதாகவும், அப் பகுதியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறிருக்க, கொலம்பியாவின் கரையோர நகரான  Barranquilla  நகரிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அருகில் நேற்றுமுன்தினம்  இடம்பெற்ற குண்டு வெடிப்பில், 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதுடன், 42 பேர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.