ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள  இராணுவப் பயிற்சி நிலையத்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதுடன், பாரிய துப்பாக்கிச்சூடு இடம்பெற்று வருவதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

மார்ஷல் பாஹீம் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்திலேயே, இன்று  அதிகாலை முதல் இந்தச் சம்பவம் இடம்பெற்று வருகின்றது.

இந் நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலை முன்னெடுத்துள்ளார்களா? அல்லது, இராணுவத்தினரினுள் ஏற்பட்ட குழப்ப நிலைமையால் சம்பவமா? என்பது தொடர்பாக இதுவரையில் தெரியவில்லை.

இருப்பினும், மேற்படி நிலையத்தில் அதிகாலை 5 மணி முதல் பாரிய துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் கேட்டு வருவதாகவும், அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறிருக்க, காபூலிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம், உயர் சமாதான அலுவலகம், ஆப்கானிஸ்தானின் பழைய உட்துறை அமைச்சுக் கட்டடம் ஆகியவற்றுக்கு அருகில் நேற்றுமுன்தினம்  இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 100 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 158 பேர் காயமடைந்தனர். 

இந்தக் குண்டு வெடிப்பையடுத்து, தற்போது இராணுவப் பயிற்சி நிலையத்தில் இத் தாக்குதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.