சுதந்திரக் கட்சி தனித்து ஆட்சியமைக்க வேண்டுமாயின் கூட்டு எதிரணி இணைய வேண்டும். அவ்வாறு இணைவதற்கு ஒரு போதும் சாத்தியமில்லை என சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

Image result for ஜோன் அமரதுங்க

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக ஜனாதிபதி செய்யும் விமர்சனங்கள் அனைத்தும் தேர்தலுடன் முடிவடைந்து விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுதந்திரக் கட்சியினர் ஒன்றிணைந்தால் தனி ஆட்சி அமைக்க தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில் வினவிய போதே அவர் கேசரிக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக பேசுவதற்கு எமக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானமாகும். எனினும் தற்போது சுதந்திரக்கட்சி இரண்டாக பிளவுப்பட்டுள்ள நிலையில் தனி ஆட்சி அமைக்கப் போவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

எனினும் தற்போது கூட்டு எதிரணியினர் தனி கட்சி அமைத்து சென்று விட்டனர். இந்நிலையில் கூட்டு எதிரணியுடன் சேர்ந்து தனி ஆட்சி அமைப்பதற்கு சாத்தியம் குறைவாகும். ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக ஜனாதிபதி செய்யும் விமர்சனங்கள் அனைத்தும் தேர்தலுடன் முடிவடைந்து விடும். தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு அன்றி கூட்டு எதிரணிக்கு எதிராகவே ஜனாதிபதி விமர்சனம் செய்கின்றார். எனவே தேசிய அரசாங்கத்தின் பயணம் தொடரும் என்றார்.