(எம்.மனோசித்ரா)

ஊவா மாகாணம் பதுளை மகளிர் மகா வித்தியாலய அதிபரை முழந்தாளிடச் செய்த விவகாரம் தொடர்பில் நாளை மறுநாள் செவ்வாய் கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழு மீண்டும் கூடி ஆராயவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. 

அதிபரை மண்டியிடச் செய்த விவகாரம் தொடர்பில் கடந்த வாரம் ஊவா மாகாண கல்வி செயளாலரிடம் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் விசாரணைகள் மேற்கொள்ளபட்டிருந்தன. விசாரணைகளின் போது அதிபரை தான் முதலமைச்சரிடம் அழைத்துச் சென்றதாக ஏற்றுக் கொண்டதாக இலங்கை ஆசிரியர் சங்க பொது செயளாலர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். 

இதேவேளை, பதுளை கல்வி வலய கல்வி பணிப்பாளர் மற்றும் பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டும் வருகை தராமையை முன்னிட்டு அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.