தனியார் துறை ஊழி­யர்­க­ளுக்­கான ரூபா 2500 சம்பள அதிகரிப்பானது தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள விட­யத்தில் உள்­வாங்­கப்­படும் என தொழிலாளர் உற­வுகள் மற்றும் தொழில் அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ன நேற்று சபையில் தெரி­வித்தார்.

தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பளம் தொடர்­பான கூட்டு ஒப்­பந்தம் காலா­வ­தி­யா­கி­விட்ட போதும் அது மீள கையெ­ழுத்­தி­டப்­ப­டாத சூழ்­நி­லை­யி­லேயே இத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அமைச் சர் குறிப்பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தின் போது,

தனி­யார்­துறை ஊழி­யர்­களின் சம்­பள அதி­க­ரிப்பு தொடர்பில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் எம்.பி டலஸ் அழ­கப்­பெ­ரும நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­விடம் எழுப்­பிய கேள்­விக்கு விளக்­க­ம­ளிக்கையிலேயே அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ன இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் ஜோன் சென­வி­ரட்ன மேலும் தெளி­வு­ப­டுத்­து­கையில்,

தனியார் துறை ஊழி­யர்­களின் சம்­பள அதி­க­ரிப்பு குறித்து நாம் தீர்­மானம் எடுத்­துள்ளோம்.

இதன்­போது தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள அதி­க­ரிப்பு குறித்த பிரச்­சினை எழுந்­துள்­ளது.

ஏனெனில் தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு சம்­பள அதி­க­ரிப்பை வழங்­கு­வ­தற்­கான கூட்டு ஒப்­பந்தம் சம்­பந்­தப்­பட்ட தரப்­பி­னரால் இது­வ­ரையில் கைச்­சாத்­தி­டப்­ப­ட­வில்லை.

எனவே தனி­யார்­துறை ஊழி­யர்­க­ளுக்­கான 2500 ரூபா சம்­பள உயர்வு சட்ட மூலத்திற்குள் தோட்டத் தொழிலாளர்களையும் உள்வாங்கியுள்ளோம்.

தனியார்துறை ஊழியர்களுக்கு ஆக குறைந்த சம்பளம் 10,000 ரூபாவாகும் என்றார்.