இலங்கை, பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முக்கோண ஒருநாள் தொடரில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

பங்களாதேஷின் டாக்காவில் இன்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் தரங்க 56 ஓட்டங்களையும் டிக்வெல்ல 42 ஓட்டங்களையும் சந்திமல் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் ருபெல் ஹுசெய்ன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் 222 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு இலங்கை வீரர்களின் பந்துவீச்சு சிம்மசொப்பனமாகத் திகழ, ஆரம்பத்திலிருந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரியத் தொடங்கின.

41.1 ஓவர்களில் பங்களாதேஷின் அனைத்துவிக்கெட்டுகளும் இழக்கப்பட 142 ஓட்டங்களைப் பெற்று 79 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

தனது முதலாவது போட்டியில் விளையாடிய 22 வயதுடைய இளம் இலங்கை அணி வீரர் ஷெஹான் மதுஷங்க அசத்தலாக பந்து வீசி ஹெட்ரிக் சாதனை படைத்து இலங்கை அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில் மஹமதுல்லா 76 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் மதுஷங்க 3 விக்கெட்டுகளையும் துஷ்மந்த சாமீர மற்றும் அகில தனஞ்சய ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இலங்கை அணியின் பயிற்சியாளராக ஹத்துருசிங்க பதவியேற்றதன் பின்னர் இலங்கை அணி வெற்றிபெறும் முதலாவது ஒருநாள் தொடர் என்பதுடன் கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப்பின்னர் இலங்கை அணி வெற்றிபெறும் முதலாவது ஒருநாள் தொடர் இதுவாகும்.