ஐக்கிய நாடுகள்  மனித உரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும்  பெப்ரவரி  மாதம் 26 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் நான்கு முனை  பிரசாரப் பணிகள் முன் னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

குறிப்பாக அரசாங்கத் தரப்பு பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பு  மற்றும் சர்வதேச தரப்பு  தென்னிலங்கை  தரப்பு ஆகியன கடும் பிரசாரப் பணிகளில் ஈடுபடவுள்ளன. 

மார்ச்  15ஆம் திகதி இலங்கை தொடர்பான பூகோள காலக்கிரம மீளாய்வு விவாதம் ஜெனிவாவில்  நடைபெறவுள்ளது. இதேபோன்று மார்ச் 21ஆம் திகதி  ஜெனிவாப் பிரேரணையை  இலங்கை எவ்வாறு அமுல்படுத்தியது என்பது குறித்து ஆராயும் விவாதம் நடைபெறவுள்ளது. அதேபோன்று  20க்கும் மேற்பட்ட  உபக்குழுக்கூட்டங்களும்  ஜெனிவா வளாகத்தில் இம்முறை கூட்டத் தொடரில் நடைபெறவுள்ளன. 

குறிப்பாக   அரசாங்கத் தரப்பு தாம்  எவ்வாறு  நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம் என்பது குறித்து ஜெனிவாவில் விளக்கமளிக்கவுள்ளதுடன் ஜெனிவா வளாகத்தில் நடைபெறும் உபக்குழுக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு தமது பக்க நியாயங்களை வெளிப்படுத்தவுள்ளது. 

இதற்காக வெளிவிவகார அமைச்சின் உயர்  அதிகாரிகள்   குழு  ஜெனிவா செல்லவுள்ளது. அதேபோன்று   வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன்   ஜெனிவாவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகளும்  கூட்டங்களில் உரையாற்றவுள்ளனர். 

அதேபோன்று சர்வதேச சமூகமும் இலங்கை தொடர்பாக பல்வேறு விடயங்களை வலியுறுத்தவுள்ளது.   சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள்  சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர்  இலங்கை தொடர்பாக  உரைகளை நிகழ்த்தவுள்ளனர். குறிப்பாக  இலங்கையான 2015ஆம் ஆண்டு  ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்தவேண்டுமென்றும்  பொறுப்புக்கூறல் பொறிமுறையை    முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்கவேண்டுமென்றும்  சர்வதேச சமூகம் வலியுறுத்தவுள்ளது. 

இதேவேளை விசாரணை நடவடிக்கைகளில்  சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு இருக்கவேண்டுமெனவும்  சர்வதேச சமூகம்   இலங்கை தொடர்பில்  நடைபெறும் உபக்குழுக்கூட்டங்களில் வலியுறுத்தவுள்ளது. இதேவேளை  தென்னிலங்கையிலிருந்தும் பெரும்பான்மை சமூகத்தின்   பிரதிநிதிகள்  ஜெனிவா கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். 

அதாவது இராணுவத்தினர் மீது  கைவைக்கக்கூடாது என்று    விசாரணை செயற்பாடுகளில் சர்வதேச  தலையீடு இருக்கக்கூடாது என்று  தென்னிலங்கை   தரப்பு  ஜெனிவாவில் வலியுறுத்தவுள்ளது. இதனிடையே வடக்கு, கிழக்கில் பாதிக்கப்பட்ட  மக்களின் பிரதிநிதிகளும்   இம்முறை கூட்டத் தொடரில் முகாமிட உள்ளனர். 

அங்கு இடம்பெறும்  இலங்கை தொடர்பான அமர்வுகள் மற்றும் உபக்குழுக்கூட்டங்களில்  பாதிக்கப்பட்ட மக்களின்  பிரதிநிதிகள் கலந்து கொண்டு  தமக்கு  இதுவரை நீதி நிலைநாட்டப்படாமை குறித்து  விளக்கமளிக்கவுள்ளனர். 

அதேபோன்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் அனுசரணையுடன் பாதிக்கப்பட்ட மக்கள் விசேட உபக்குழுக்கூட்டங்களையும் இம்முறை ஜெனிவாவில் நடத்துவதற்கு  முயற்சிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த  வகையில் நான்கு தரப்புக்களும் இம்முறை ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்து கொண்டு  கடும் பிரசாரப் பணிகளில்  ஈடுபடவுள்ளன. 

இலங்கை  அரசாங்கம்  சர்வதேச பங்களிப்புடன் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவேண்டுமென தெரிவித்து 2015ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரில்  பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட்டது.  அந்தப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும்  அனுசரணை வழங்கியிருந்தது. 

அந்தப் பிரேரணையானது கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற  ஐ.நா. மனித உரிமை பேரவையின் 34 ஆவது  கூட்டத் தொடரில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு  இலங்கைக்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்டது. 

அதன்படி  எதிர்வரும்  2019ஆம் ஆண்டு வரை   இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.   இந்நிலையில்  இம்முறை மார்ச் மாதம் நடைபெறவுள்ள   37ஆவது கூட்டத் தொடரில் இலங்கை எவ்வாறு   இந்த  பிரேரணையை அமுல்படுத்துகின்றது என்பது தொடர்பாக   ஐக்கிய நாடுகள் மனித  உரிமை பேரவையின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன்  விசேட அறிக்கையொன்றை  நிகழ்த்தவுள்ளார். 

அதேபோன்று இலங்கையின் சார்பிலும்  விபரமான அறிக்கையொன்றும் வெளியிடப்படவுள்ளது. மேலும் 2017 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட   ஐக்கியநாடுகளின் விசேட நிபுணர் பென் எமர்சனின் இலங்கை தொடர்பான அறிக்கை இம்முறை கூட்டத் தொடரில் வெளியிடப்படவுள்ளது. அத்துடன் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும்   இலங்கை  கடந்த மூன்று வருடங்களில்  மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் குறித்து விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளன. 

இதேவேளை அமெரிக்கா உள்ளிட்ட ஒருசில நாடுகள் இலங்கை தொடர்பாக விசேட உபக்குழுக்கூட்டங்களை நடத்துவதற்கு தயாராகி வருவதாக  தெரிகிறது. அத்துடன் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச்சபை   மற்றும் தென்னிந்தியாவின் பசுமை தாயகம் போன்ற அமைப்புக்களும் இலங்கை மனித உரிமை நிலைமை குறித்து ஆராயும் விசேட உபகுழுக்கூட்டங்களை   நடத்துவதற்கு  தயாராகி வருவதாக தெரியவருகிறது.