வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் ஜப்பான் மற்றும் சீன முதலீடுகளுக்கு இடையில் பாரிய வேறுப்பாடுகள் உள்ளன. எந்த வகையிலும் இரண்டையும் ஒன்றிணைக்க முடியாது என தெரிவித்துள்ள ஜப்பானிய வர்த்தக பிரதிநிதிகள் குழு , இலங்கையில் ஜப்பானிய பொருளாதார பணி உருவாக்த்தை ஆர்வமாக கொண்டு செயற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

இலங்கையில் உள்ள வர்த்தக, முதலீடு வாய்ப்புக்களைக் கண்டறியும் பொருட்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வர்த்தக, கைத்தொழில் சபை பிரதிநிதிகள் குழு ஊடகவியலாளர்களை சந்தித்து தெளிவுப்படுத்தியது. 

1979 ஆம் ஆண்டில் ஜப்பான் வர்த்தக சபையை பிரதிநிதித்துவம் செய்த தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகைதந்ததன் பின்னர் தற்போது 39 வருடங்களுக்கு பின்னரே இத்தகைய பாரியளவிலான தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர் .

இதன் போது உரையாற்றிய ஜப்பானிய வர்த்தக மற்றும் கைத்தொழில் குழுவின் தலைவர் கலாநிதி அகியோ மிமுரா குறிப்பிடுகையில் , 

ஜப்பான் நீண்ட காலமாக இலங்கையுடன் மிகவும் நட்புறவை கொண்டுள்ளது. இரு நாட்டு அரச தலைவர்களுக்கு மத்தியில் காணப்படும் புரிந்துணர்வுகள் இரு நாட்டு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என ஜப்பான் வர்த்தக, கைத்தொழில் சபை பிரதிநிதிகள் குழு நம்புகின்றது. 

அதே போன்று ஜப்பான் உலகில் பல நாடுகளுடனும் சிறந்த தோழமையை வளர்த்துக்கொண்டுள்ளது. குறிப்பாக இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளுடன் அனைத்து வகையான ஒத்துழைப்புகளுடனும் ஜப்பான் பரந்தளவில் செயற்படுகின்றது. ஜப்பானை விட ஏனைய நாடுகள் இலங்கையில் அதிகளவு முதலீடுகளை மேற்கொள்கின்றது எனில் அதனை வரவேற்கின்றோம். 

குறிப்பாக சீனாவின் முதலீடுகளை சொல்ல முடியும்.  ஆனால் நடென்ற வகையில் அவர்களின் செயற்பாடுகள் ஜப்பானுடன் ஒப்பிட முடியாது. வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் ஜப்பான் மற்றும் சீன முதலீடுகளுக்கு இடையில் பாரிய வேறுப்பாடுகள் உள்ளன. எந்த வகையிலும் இரண்டையும் ஒன்றிணைக்க முடியாது. அதே போன்று தான் இலங்கை போன்ற நாடுகளுக்கான அபிவிருத்தி நிதி உதவிகளும் .

அரச மற்றும் தனியார் துறைக்கும் இடையில் காணப்படும் ஒத்திசைவான போக்கின் வெளிபாடாகவே வெளிநாடுகளுக்கான ஜப்பானின் முதலீடுகள் அமைகின்றன. எவ்வாறாயினும் தற்போது ஜப்பான் அரசினதும் தனியார் துறையினதும் ஆர்வம் இலங்கை மீதுள்ளது. எனவே தான் இலங்கையில் ஜப்பானின் பொருளாதார பணி உருவாக்கும் நோக்கில் வந்துள்ளோம். 

முதலீட்டு சபையுடனான சந்திப்புகளின் போது பல்துறைசார் முதலீடுகள் குறித்து பேசினோம். அவற்றில் காணப்படும் பிரச்சினைகளையும் கவனத்தில் கொண்டோம். 80 வீதமான சுமூகமான நிலைமையை உருவாக்கி கொண்டு எஞ்சிய 20 வீதத்தை தோழமையுடன் எதிர்கொள்ளும் புரிந்துணர்வுகள் அவசியமாகின்றது. எவ்வாறாயினும் ஜப்பானின் முதலீடுகளுக்கு சிறந்த சூழல் இலங்கையில் காணப்படுகின்றது. அதனை நோக்கிய நகர்வினையே முன்னெடுப்போம் என தெரிவித்தார்.