ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட அமைப்பாளர்கள் இன்று முற்பகல் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மாவட்டத்திற்கான புதிய அமைப்பாளராக பூஜாபிட்டிய பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அனுர குமார மடலுஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தளை மாவட்டத்திற்கான அமைப்பாளராக டப்ளியு.எம்.வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.கலேந்திரனும் இதன்போது ஜனாதிபதியிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதனிடையே பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏறாவூர் பிரதேச சபை உறுப்பினர் ஜீ.விஜிதரன் ஜனாதிபதியின் செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து இன்று அவருடன் இணைந்துகொண்டார்.

மேலும் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையிலான சுயேச்சைக் குழு அபேட்சகரான கே.கேதிஸ்வரனும் இன்று ஜனாதிபதியை சந்தித்து ஆதரவு தெரிவித்ததுடன், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்தார்.