"2020 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தனித்து களமிறங்கி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்கும் போராட்டத்தை கையாளும்" என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

வென்னப்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே ருவான் விஜயவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

" உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் பிரதான இரண்டு கட்சிகளின் தேசிய அரசாங்கமே  முன்னெடுக்கப்படும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  எமது அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தி வருகின்றார். ஆனால் அவரது காலத்தில் இருந்த மோசமான சூழ்நிலைகள் இன்று இல்லை.

புதிய முறையில் இப்போது தேர்தல் ஒன்றை அனைவரும் எதிர்கொண்டு வருகின்றோம்.

பெண்களை துஷ்பிரயோகம் செய்து அதனை கொண்டாடும் நபர்களோ, கொலை செய்து, கொள்ளையடித்து வாழும் நபர்களோ எமது கட்சியில் பிரதேச சபைகளுக்கு போட்டியிடவில்லை.

பிரதமர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை வீழ்த்தும் சூழ்ச்சியொன்று முன்னெடுக்கபட்டு வருகின்றது.

ஆனால் நாங்கள் இவற்றில் சிக்கப்போவதில்லை. இம்முறை நாம் ஏமாறப்போவதுமில்லை,

இந்த அரசாங்கத்தை 2020ஆம் ஆண்டு வரையில் நாம் கொண்டுசெல்வோம்.

2020 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி தனிக் கட்சியாக உருப்பெற்று இந்த நாட்டின் தனி அரசாங்கத்தை உருவாக்கும்."என தெரிவித்தார்.