மட்டக்களப்பு - வாகரை பகுதியில் மற்றுமொரு காட்டு யானை ஒன்று துப்பாக்கி சூட்டுக்கு  இலக்காகி உயிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த புதன் கிழமையன்று வாகரை - கதிரவெளி, பணிச்சங்குளம் வயல்வெளி பிரதேசத்தில் பெண் யானை ஒன்று உயிரிழந்து காணப்பட்டதை கண்ட பிரதேச  பொதுமக்கள் வன ஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலறிந்து  சம்பவ இடத்திற்கு சென்ற வன ஜீவராசிகள் திணைக்களத்தினர்  வாகரை பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த காட்டு யானையின் வயிற்றுப் பகுதி தலை மற்றும் கால் பகுதிகளில் துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதால் யானை உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இறந்த குறித்த காட்டு யானையின் உடலை அகற்றும் பணியை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மிருக வைத்தியர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்டனர்.