தென்கொரியாவின் மிர்யங் பகுதியிலுள்ள வைத்தியசாலையொன்றில் நேற்று தீ பரவியதில், சுமார் 41 பேர் உயிரிழந்துள்ளதுடன், 70க்கும் மேற்பட்டோர் எரிகாயமடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எரிகாயமடைந்துள்ளவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்புகள் அதிகரிக்கலாமெனவும் ஸ்தலத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரிகள் ஊடகங்களுக்கு தெரிவிக்கின்றனர்.

சீஜோங் வைத்தியசாலையின் இருதய சிகிச்சைக்காக அவசரசிகிச்சைப் பிரிவில் பற்றிய தீயானது வைத்தியசாலையின் ஏனைய பகுதிகளுக்கு பரவியதாக பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தீ பரவிய வேளையில் 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் வைத்தியசாலையினுள்ளும், அருகிலுள்ள தாதியர் கட்டடத்திலும் இருந்துள்ளனர். இவர்களில் பலர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேற்படி வைத்தியசாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை. இந்தத் தீ விபத்துத் தொடர்பாக ஆராய்வதற்காக, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே அவசரக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார்.