அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ள சுமார் 2 மில்லியன் பேருக்கு, குடியுரிமை வழங்கும் திட்டத்தை, ட்ரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது.

வெள்ளை மாளிகையின் கொள்கை வகுப்புக் குழுத் தலைவர் ஸ்டீஃபன் மில்லர், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியுடன் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான பேச்சுவார்த்தையின்போது,

மெக்சிகோ எல்லையில் சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதற்கான சுவரை நிர்மாணிக்க 2,500 கோடி அமெரிக்க டொலர் நிதி வழங்க ஒப்புதல் அளித்தால், அடுத்த 10, 12 ஆண்டுகளில் சட்டவிரோதக் குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்க ஆவண செய்வதற்குத் தெரிவிக்கப்படுமென்று, குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளார்.

அதற்கான நிதி சட்டமூலம் எதிர்வரும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. எனினும், மெக்சிகோ எல்லைச் சுவருக்கு அரசாங்கம், நிதி வழங்குவதை எதிர்க்கப்போவதாக ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரொருவர் தெரிவித்துள்ளார்.

‘டிரீமர்ஸ்’ என்று அழைக்கப்படும், தங்கள் குழந்தைப் பருவத்திலேயே அமெரிக்காவில் முறையான ஆவணங்களின்றி குடியேறியவர்கள் மற்றும் ஏனைய 11 லட்சம் வெளிநாட்டவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடையத் தகுதியுடையவர்கள் ஆவர்.

‘டிரீமர்ஸ்’ எனப்படுபவர்களை வெளியேற்றுவதைத் தள்ளிவைக்கும் ‘டாகா’ எனும் திட்டம் பராக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தபோது அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.