இலங்கையில் உள்ள வர்த்தக முதலீடு வாய்ப்புக்களைக் கண்டறியும் பொருட்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வர்த்தக, கைத்தொழில் சபை பிரதிநிதிகள் குழு இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தது.

140 வருடகால வரலாற்றையுடைய ஜப்பான் வர்த்தக, கைத்தொழில் சபை மற்றும் டோக்கியோ வர்த்தக,கைத்தொழில் சபை என்பவற்றை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் 77 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் வருகைத்தந்துள்ளனர்.

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் நீண்டகால நட்புறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி  கல்வி, சுகாதாரம், விவசாயம், போன்ற பல்வேறு துறைகளில் ஜப்பானிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜி - 8 மாநட்டில் சந்தித்த ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே (Hon. Shinzo Abe) இலங்கை மீது கொண்டிருந்த நட்புறவினை தான் மிகவும் பாராட்டுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜப்பானின் ஜய்க்கா (JAICA) நிறுவனத்தினால் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும் ஒத்துழைப்பினை இதன்போது பாராட்டிய ஜனாதிபதி , எமது நாட்டின் முதலீட்டு வாய்ப்புக்களை அதிகரித்துக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்ப்பதனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜப்பான் முதலீட்டாளர்களுக்கு தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

1979 ஆம் ஆண்டில் ஜப்பான் வர்த்தக சபையை பிரதிநிதித்துவம் செய்த தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகைதந்ததன் பின்னர் தற்போது 39 வருடங்களுக்கு பின்னரே இத்தகைய பாரியளவிலான தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இக் குழுவிற்கு தலைமை வகிக்கும் கலாநிதி அக்கியோ மிமுரா (Akio Mimura),

இலங்கையில் கைத்தொழில், உட்கட்டமைப்பு வசதிகள், இரும்பு, மென்பொருள், போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ள தமது அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இது தொடர்பான முன்மொழிவுகள் அடங்கிய கோவையொன்றையும் அவர்  ஜனாதிபதியிடம் கையளித்தார்.

அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, ஜப்பானிற்கான இலங்கை தூதுவர் பேராசிரியர் கங்காநாத் திசாநாயக்க, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் H.E. Kenichi Suganuma ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.