யேமன் நாட்டில்  உளவு பார்த்த சவுதியின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக யேமன் நாட்டு விமானப் படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சவுதியின் ஆளில்லா விமானம் மத்திய மாரிப் மாகாணத்தின் ஹரிப் அல்-குராமிஷ் பிராந்தியத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேயனின் வடமேற்கு மாகாணமான ஹஜ்ஜாவில் கடந்த டிசம்பர் 30ஆம் திகதியும் சவுதியின் ஆளில்லா விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அதேபோன்று இம்மாத ஆரம்பத்திலும் ரோயல் சவுதி விமானப்படை மூலம் இயக்கப்படும் ஆளில்லா விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக யேமன் இராணுவம் அறிவித்தது.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சவுதி தலைமையிலான கூட்டணி யேமனில் விமானத் தாக்குதல்களையும் கடல்வழியூடான தாக்குதல்களையும் நடத்திவருகின்ற நிலையில் இதுவரை 13 ஆயிரத்து 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் மனிதாபிமான நெருக்கடிகளையும் தோற்றுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.