அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சிறப்பு விசாரணை ஆலோசகரின் விசாரணைகளுக்கு எதிர்பார்த்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தமது வழக்கறிஞர்களின் ஒப்புதலுடன் இன்னும் ஓரிரு வாரங்களில் நீதித்துறையின் சிறப்பு விசாரணை அதிகாரியான ரொபர்ட் மியுலர் தன்னிடம் விசாரணைகளை நடத்தலாம் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்று  செய்தியாளர்களிடம் இது தொடர்பாக பேசிய ட்ரம்ப் விசாரணைகளுக்கு முழுமையாக தயாராக இருப்பதாகவும் அதனை விரைவாக எதிர்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக ட்ரம்ப் தரப்பு வழக்கறிஞர்கள் ஏற்கனவே ரொபர்ட் மியுலருடன் ஆலோசித்து உள்ளதாகவும் நேர்காணல் போன்றோ அல்லது உரையாடலாகவோ அல்லது எழுத்துபூர்வமாகவோ மேற்படி விசாரணை நடத்தப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

அமெரிக்க அரசின் தலைமை வழக்கறிஞரான ஜெஃப் செஷன்ஸ் கடந்த வாரம் மியுலரால் பல மணிநேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அதேவேளை மியுலரின் விசாரணைகளின் ஒருபகுதியாக, அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் ஃப்ளின், ட்ரம்பின் பிரசாரக் குழுவின் முன்னாள் மேலாளர் போல் மனஃபோர்ட், மனஃபோர்ட்டின் தொழில் கூட்டாளி ரிக் கேட்ஸ் மற்றும் ட்ரம்ப்பின் மற்றுமொரு பிரசார ஆலோசகரான ஜோர்ஜ் பாபடோபோலஸ் ஆகியோர் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.