வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் ஒருமித்த, பிரிக்கமுடியாத, பிரிவுபடாதநாட்டிற்குள் தீர்வொன்றை விரும்புகிறார்கள் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், போலியான ஒரு தீர்வை நாம் எப்போதும் ஏற்கப்போவதில்லையெனவும் தெரிவித்தார்.

புதியஅரசியல் யாப்புஉருவாக்கம் தொடர்பிலான தற்போதைய நிலைமை குறித்து சிங்கப்பூர் பிரதமருக்கு இரா. சம்பந்தன் தெளிவுபடுத்தினார்.  

இந்த நடைமுறைகளை வெற்றிகரமான ஒருமுடிவுக்குக்  கொண்டுவருவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன், புதிய அரசியலமைப்புத் தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் பரப்பப்படும் பிழையான, தேவையற்ற அச்சங்களை நீக்குமுகமாக ஜனாதிபதியும் பிரதமரும் சிங்கள மக்கள் மத்தியில்  புதிய அரசியல் யாப்புத் தொடர்பில் தெளிவூட்டல்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

தற்போது மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானதல்ல என்பதையும் இரா.சம்பந்தன் அவர்கள் சிங்கப்பூர் பிரதமருக்குஎடுத்துக் கூறினார்.  

இலங்கைக்கு விஜயம் செய்த சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூஙை இன்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய போதே எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.