கடந்த 1979 ஆம் ஆண்டு இலக்கம் 59 இன் கீழான கடற்தொழில் ( வெளிநாட்டு கடற்தொழில் வள்ளங்கள் முறைப்படுத்தல்) சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான திருத்தச்சட்ட மூலம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

விசேடமாக இலங்கை கடல் எல்லைப் பகுதிக்குள் பிரவேசித்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடல் நடவடிக்கையை தடுப்பதே இதன் பிரதான நோக்கம்.

எமது நாட்டுக்குட்பட்ட கடற்பகுதியில் கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்களை பாதுகாப்பதுடன் இதன் கீழ் இதுவரையில் இந்த சட்டத்தில் இருந்த சரத்து பலவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய சட்டத்தின் கீழ் கைப்பற்றப்படும் கடற்தொழில் படகுகள் தொடர்பிலான தண்டப்பணம் புதிய திருத்தத்தின் கீழ் அதிகரிக்கப்படுகின்றது. 

இதுவரையில் நடைமுறையில் இருந்த 15 இலட்சம் ரூபா தண்டப்பணம் 175 மில்லின் ரூபா வரையில் அதிகரிக்கப்படுவதுடன் சம்பந்தப்பட்ட சட்ட நடவடிக்கைகள் கடற்தொழில் வள்ளம் கைப்பற்றப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் தீர்க்கப்படவுள்ளது.

அதேபோன்று கைப்பற்றப்படும் படகு தொடர்பில் குறிப்பிட்ட அந்த நாட்டின் கவுன்சிலருக்கு முடிந்தவரை விரைவாக கடற்தொழில் திணைக்களத்தினால் அறிவிக்கப்படல் வேண்டும்.

மேலும் சட்ட விதிகளை நடைமுறைப்படுத்தும்போது கைப்பற்றப்படும் கடற்தொழில் வள்ளத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட வேண்டும். 

புதிய திருத்தத்திற்கு அமைவாக சம்பந்தப்பட்ட தண்டப்பணம் 15 மீற்றருக்கு குறைந்த நீளத்தை கொண்ட படகிற்கு 5 மில்லியன் ரூபாவும் , 15 – 24 மீற்றருக்கும் இடைப்பட்ட கடல் தொழில் வள்ளத்திற்கு 20 மில்லியன் ரூபாவும், 24 - 45 இடைப்பட்ட மீற்றர் நீளத்தை கொண்ட கடற்தொழில் வள்ளத்திற்கு 100 மில்லியன் ரூபாவும் , 45-75 மீற்றருக்கு இடைப்பட்ட வள்ளத்திற்கு 150 மில்லியன் ரூபாவும், 75 மீற்றருக்கு மேற்ப்பட்ட மீன்பிடி வள்ளத்திற்கு 175 மில்லியன் ரூபா வரையில் தண்டப்பணம் விதிக்கமுடியும்.

இதே போன்று எமது நாட்டு கடல் பகுதிக்கு அனுமதிப் பத்திரத்திரமில்லாமல் பிரவேசிக்கும் எத்தகைய கடற்தொழில் வள்ளங்களுக்கும் வள்ளத்தின் நீளத்திற்கு அமைவாக அனுமதிப்பத்திர கட்டணமாக ரூபா 7 இலட்சத்து 50 ஆயிரத்திலிருந்து 3 மில்லியன் முதல் 150 மில்லியன் ரூபா வரையில் அதிகரிக்கப்படவுள்ளதென அவர் மேலும் தெரிவித்தார்.