இரவு விடுதி ஒன்றில் ரசிகரை தாக்கிய சம்பவம் தொடர்பாக பிறிஸ்ரோல் நீதவான் நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளித்த பின்னரே நியூஸிலாந்து தொடருக்கான இங்கிலாந்து அணியில் இணைய முடியும் என்று சகலதுறை ஆட்டவீரர் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

28 வயதான பென் ஸ்டோக்ஸ் கடந்த செப்டம்பர் மாதம் பிறிஸ்ரோல் இரவு விடுதி ஒன்றில் ரசிகரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு விசாரணைகளுக்கு முகம்கொடுத்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி விளக்கமளிப்பதற்காக பிறிஸ்ரோல் நீதவான் நீதிமன்றில் பென் ஸ்டொக்ஸ் ஆஜராகவுள்ளார்.

இந்நிலையில் "நீதிமன்றில் அஜராகும் வரை அணியின் இணைவது சரியானதன்று" என தனது டுவிட்டர் பக்கத்தில் பென் ஸ்டோக்ஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.

எனவே நியூஸிலாந்துடனான முதலாவது T-20 போட்டி பெப்ரவரி 13ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இப்போட்டியில் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்க மாட்டார் என்பது தெளிவாகியுள்ளது.

எனினும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது T-20யில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் மற்றும் இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர்களிலும் பங்கேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.