(ஆர்.யசி)

ஜனாதிபதியும் பிரதமரும் முரண்படுவதால் தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்ல முடியாது. கள்ளர்களை தண்டிக்கும் போராட்டத்தில்  ஜனாதிபதிக்கு பிரதமர் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை உண்மையாக்க முடியும் என்கிறது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி. 

Image result for mahinda samarasinghe virakesari

மத்திய வங்கி பிணைமுறி ஊழல் மட்டுமல்ல அனைத்து ஊழல் நடவடிக்கைகளையும் முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஒரே நோக்கமாகும். அதில் தனக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதையே அவர் தெரிவித்து வருகின்றார். கள்ளர்களை தண்டிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சியும் பூரண ஒத்துழைப்புகளை வழங்கினால் மட்டுமே எம்மால் முழுமையாக தூய்மையான நாட்டினை முன்னெடுக்க முடியும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாகவும், நாட்டின் தலைவர் என்ற ரீதியிலும் ஜனாதிபதி சரியாக செயற்பட்டு வருகின்றார். பிரதமரும் அதனை உணர்ந்து செயற்பட வேண்டும். கள்ளர்களை தண்டிக்கும் செயற்பாட்டில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படும் நிலையில் தேசிய அரசாங்கத்தை சரியாக கொண்டுசெல்ல முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைத் தெரிவித்தார்.