"பத்மாவத்" திரைப்படத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், மாநில அரசுகள் முதலில் நீதிமன்ற உத்தரவை மதிக்க வேண்டும் என கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பத்மாவத்' திரைப்படத்தில், ராணி பத்மினியின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக  கூறி கர்னி சேனா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த திரைப்படம், வரும் 25 ஆம் திகதி வெளியாகவுள்ள  நிலையில் அதற்கு ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில அரசுகள் திரையிட தடை விதித்தன.

ஆனால் இந்தத் தடையை, உச்ச நீதிமன்றம் நீக்கியது. 'பத்மாவத்' படத்திற்கு வழங்கப்பட்ட திரைப்பட தணிக்கை வாரிய சான்றிதழை ரத்து செய்யக்கோரிய மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், 'பத்மாவத்' படத்திற்கு தடை விதிக்கக் கோரி, ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று  விசாரணைக்கு வந்த போது  ‘‘நீதிமன்றத்தின் உத்தரவை மாற்றியைமக்க வாய்ப்பில்லை. சட்டம்  ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, படத்திற்கு தடை விதிக்க முடியாது.

படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மக்களிடம் தான் பிரச்சாரம் செய்ய வேண்டுமே தவிர சட்டம் - ஒழுங்கை தங்கள் கையில் எடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. நீதிமன்றத்தின் உத்தரவை மாநில அரசுகள் முதலில் மதித்து நடக்க வேண்டும். ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்க முடியாது’’ நீதிபதிகள் எனக்கூறினர்.