அமெரிக்காவில் தற்காலிகமாக செலவினங்களுக்கு நிதியளிக்கும் மசோதாவிற்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அங்கு கடந்த மூன்று நாட்களாக நிலவி வந்த முடக்கம் சீரடையத் தொடங்கியுள்ளது.

அமெரிக்காவில் ஒக்டோபர் முதல் செப்டம்பர் வரை நிதியாண்டாக கணக்கிடப்படுகிறது. அதன்படி 2018 ஆம் ஆண்டுக்கான நிதியாண்டு கடந்த ஒக்டோபர் 1ஆம் திகதி தொடங்கியது. அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்க அந்த நாட்டு பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் செலவின மசோதா நிறைவேற்றப்படுகிறது.

அமெரிக்க பாராளுமன்றத்தில் 2018 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக இதுவரை நிறைவேறவில்லை.

அமெரிக்காவில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை நாட்டை விட்டு வெளியே அனுப்பக் கூடாது என ஜனநாயகக் கட்சியினர் கோரி வருகின்றனர். ஆனால்  ஆளும் கட்சியான குடியரசு கட்சி உறுப்பினர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதற்கு பதிலடியாக செனட் சபையில் ஜனநாயக கட்சியினர் செலவின மசோதாவை நிறைவேற்ற ஆதரவு தர மறுத்தனர்.

ஏற்கெனவே 3 முறை குறுகிய கால செலவின மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் 4 ஆவது முறையாக குறுகிய கால செலவின மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பிரதிநிதிகள் சபை ஒப்புதல் வழங்கியபோதிலும் செனட் சபையில் நிறைவேற்ற முடியாமல் போனது.

இதனால் கடந்த 20 ஆம் திகதி முதல் அந்நாட்டு அரசு நிர்வாகம் முடங்கியது. பெரும்பாலான துறைகள் மூடப்பட்டுள்ளன. எனினும் அத்தியாவசிய தேவைகளான இராணுவம், பொலிஸ், அஞ்சல் சேவை, விமான போக்குவரத்து, கட்டுப்பாடு, மருத்துவ சேவை, சிறைகள், வரிவிதிப்பு, மின் உற்பத்தி ஆகிய துறைகள் மட்டுமே இயங்கின. அமெரிக்க மத்திய அரசின் பணியாளர்களுக்கு ஊதியம் அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து சிக்கலுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு ஏற்பட்டது.

இடைக்கால ஏற்பாடாக தற்காலிக செலவினங்களுக்கு அனுமதி வழங்கும் மசோதாவுக்கு அமெரிக்க பாராளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. செனட் சபையில் இதற்கு ஆதரவாக 81 பேரும் எதிராக 18 பேரும் வாக்களித்திருந்தனர். பிரதிநிதிகள் சபையில் 266 வாக்குகளும், எதிராக 150 வாக்குகளும் பெற்றிருந்தது.

இடைக்கால மசோதா அமெரிக்க அதிபர் ட்ரம்பின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனினும் இந்த இடைக்கால செலவின மசோதா பெப்ரவரி 8ஆம் திகதி வரை மட்டுமே செல்லத்தக்கது.

நீண்ட செலவின மசோதாவுக்கும் அமெரிக்க பாராளுமன்றத்தில் விரைவில் ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.