ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7 ஆம் திகதி முதல் மே மாதம் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

 மும்பை வான்கடே மைதானத்தில் ஆரம்ப போட்டியும் இறுதிப் போட்டியும் இடம்பெறவுள்ளமை விசேட அம்சமாகும்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையால் நடத்தப்படும் ஐ.பி.எல். இருபதுக்கு - 20 கிரிக்கெட் தொடர் 10 ஆண்டுகளை சிறப்பாக கடந்துள்ளது.

11 ஆவது சீசன் இந்த வருடத்தில் ஏப்ரல் மாதம் முதல் மே மாதம் வரை நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. 

இதில் பங்கேற்கும் 8 அணிகள் பல்வேறு கோரிக்கைகள் வைத்திருந்தன. அதில் வீரர்களை தக்கவைத்துக் கொள்ளும் விதிமுறை மாற்றம் முக்கியமானதாகும். எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை வீரர்களின் மெகா ஏலம் இடம்பெறவுள்ளது. இதில் 578 வீரர்களின்  பெயர் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் ஐ.பி.எல். ஆட்சி மன்றக்குழு இன்று கூடியது. இதில் ஏப்ரல் 7 ஆம் திகதி முதல் மே 27 ஆம் திகதி வரை சுமார் 62 நாட்கள் போட்டியை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல் போட்டியையும், இறுதிப் போட்டியையும் மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். தொடரில் 2 ஆவது போட்டி அல்லது இரவு போட்டி இதுவரை இரவு 8 மணிக்கு தொடங்கியது. போட்டி முடிவதற்கு நள்ளிரவு ஆகும் என்பதால் ரசிகர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு 8 மணிக்கு தொடங்கும் போட்டியை 7 மணிக்கு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் மாலை 4 மணிக்கு தொடங்கும் போட்டியை 5.30 மணிக்கு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.