கதிர்காமத்தில் நிலவிய பதற்றநிலையை அடுத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட 58 பேரும் நீதிமன்றால் பிணையில் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர்.

கதிர்காமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு பொலிஸாரின் ஆணையை மீறி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து ஒருவர் உயிரிழந்தார். 

இதையடுத்து குறித்த பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்திலீடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியதுடன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டனர்.

இதன்போது பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்ட 13 பெண்கள் உட்பட 58 பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட அனைவரையும் இன்று திஸ்ஸமஹராம நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவர்கள் அனைவரையும் பிணையில் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.