
பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் வழக்கு விசாரணை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு, ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் சேவையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் நேற்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்களின் கடமைக்கு தொடர்ந்து இடையூறு விளைவித்த வண்ணம் இருந்த குறித்த சார்ஜன் நிலை பொலிஸ் உத்தியோகத்தர், ஞானசார தேரரின் வழக்கு விசாரணையின் போது ஒரு கட்டத்தில், தமிழ் சிங்கள ஊடகவியலாளர்களை நெருங்கி, எதற்காக இங்கு வந்தீர்கள்?, நாளை நீங்கள் இவ்விடத்துக்கு வந்தால் உங்களை சிறையில் அடைப்பேன் என கடுமையான தொனியில் அச்சுறுத்தி விட்டு அங்கிருந்து சென்றார்.
ஹோமாகம நீதிவான் நீதிமன்றில் ஊடகவியலாளர்களுக்கு என பிரத்தியேக பகுதிகள் எதுவும் இல்லாத நிலையில் அவர்கள் ஏனைய பல நீதிமன்றங்களைப் போன்று முறைப்பாட்டாளர் தரப்பு அல்லது அரச உத்தியோகத்தர்கள் இருக்கும் பகுதிகளை அண்மித்து நின்றவாறே செய்தி சேகரிப்பது வழமையாகும். இந் நிலையிலேயே ஹோமாகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பல உயர் பொலிஸ் அதிகாரிகள், நீதிவான், நீதிமன்ற பதிவாளர், சிரேஷ்ட சட்டத்தரணிகள் கூட எதுவும் தெரிவிக்காத நிலையில் குறித்த பொலிஸ் சார்ஜன் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.