அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இன்று இடம்பெற்ற  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆவது ஒரு நாள் போட்டியில் 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்நிலை பெற்று தொடரை தனதாக்கியுள்ளது.

பாரம்பரியம் கொண்ட ஆஷஸ் கிண்ணத் தொடரை அவுஸ்திரேலிய அணியிடம் பறிகொடுத்த இங்கிலாந்து அணி அந்த தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் ஒரு நாள் தொடரைக் வென்றுள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இங்கிலாந்து பறிகொடுத்த நிலையில், ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

சிட்னி நகரில் 3 ஆவது ஒருநாள் போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. நாணயச் சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய  இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 302  ஓட்டங்களைக் குவித்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான ரோய்(19), பேர்ஸ்டோ(39), ஹேல்ஸ்(1), ஜோய் ரூட்(27) போன்றோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். 189 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து திணறியது.

ஆனால், அபாரமாக ஆடிய ஜோஸ் பட்லர் அணியைச் சரிவில் இருந்து மீட்டார். இவர் 83 பந்துகளில் 100 ஓட்டங்களைக் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 4 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும்.

இவருக்கு உறுதுணையாக  கிறிஸ் வோக்ஸ் 36 பந்துகளில் 53 ஓட்டங்களைச் சேர்தது ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரின் கூட்டணியும் 113 ஓட்டங்களை சேர்த்தது.

அவுஸ்திரேலிய  தரப்பில் அதிகபட்சமாக ஹேசல்வுட் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து, 303 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 286 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 16 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் அபாரமான களத்தடுப்பினால் அவுஸ்திரேலியாவின் துடுப்பாட்ட வீரர்கள் திணறிப்போயினர்.

ஆரோன் பின்ஞ்(62),ஸ்மித்(45), மார்ஷ்(55), ஸ்டோய்னிஸ்(56) ஆகியோர் அரை சதம் அடித்தும் இலக்கை எட்ட முடியவில்லை. பைனி 31 ஓட்டங்களுடனும் கம்மின்ஸ் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ், உட், ராசித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆட்டநாயகனாக ஜோஸ் பட்லர் தேர்வு செய்யப்பட்டார்.