மக்களின் பணத்தை திருடியோருக்கு மன்னிப்பு வழங்க மாட்டேன் : ஜனாதிபதி

Published By: Priyatharshan

21 Jan, 2018 | 09:17 PM
image

நாட்டு மக்களின் பணத்தை திருடிய எவருக்கும் மக்கள் மன்னிப்பு வழங்கக் கூடாது என்றும் அத்தகையவர்களுக்கு மன்னிப்பு வழங்க நானும் தயாரில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

இனம், சமயம், நிறம் என்ற பேதமின்றி இந்த நாட்டின் அனைத்து மக்களும் இணைந்து தன்னை ஜனாதிபதியாக தெரிவுசெய்தது ஜனநாயக சமூகமொன்றையும் தூய அரசியல் இயக்கமொன்றையும் எதிர்பார்த்தேயாகும் எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, தான் எப்போதும் மக்களுடன் செயற்பட்டு அந்த சவாலை வெற்றிகொள்வதாக தெரிவித்தார்.

இன்று பிற்பகல் மட்டக்களப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

இனம், சமயம் என்ற பேதங்களின்றி நாட்டின் அனைத்து இனங்களினதும் உரிமைகளுக்காகவும் தான் முன்னிற்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அபிவிருத்தியில் பின்தங்கிய மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தியை துரிதப்படுத்தி மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தன்னுடன் செயற்படும் புதிய அமைப்பொன்றை மாவட்டத்தில் தாபிப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, அந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிபெறச்செய்வதற்கு இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்று தெரிவித்தார்.

நாட்டை முன்கொண்டுசெல்வதற்கும் தூய அரசியல் இயக்கத்திற்காகவும் இனம், சமயம் என்ற பேதங்களின்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கைகோர்த்துக்கொள்ளுமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, நாட்டு மக்களின் பணத்தை திருடிய எவருக்கும் மக்கள் மன்னிப்பு வழங்கக் கூடாது என்றும் அத்தகையவர்களுக்கு மன்னிப்பு வழங்க தானும் தயாரில்லை என்றும் குறிப்பிட்டார்.

விளையாட்டரங்கில் நிரம்பியிருந்த மக்கள் இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு பெரும் ஆரவாரத்துடன் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஜீ.ஹரிதரன்கிரியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் சந்திப்பில் ஸ்ரீ லங்கா மக்கள் தேசியக் கட்சியின் தலைமை செயலாளர் விஷ்னு காந்தன், மட்டக்களப்பு பட்டிருப்பு, கல்குடா ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொகுதி அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் பொருளாளர் ஏராவூர்பற்று

பிரதேச சபையின் முன்னாள் உப தலைவர் தம்பிநாயகம் கலேந்திரன் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்துகொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்