சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

பங்களாதேஷின் மிர்பூரில் இடம்பெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் மோதின. 

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. 

அதன்படி, களமிறங்கிய சிம்பாப்வே அணி, 44 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது.

சிம்பாப்வே அணி சார்பில் டெய்லர் 58 ஓட்டங்களையும் கிரீமர் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் திஸர பெரேரா 4 விக்கெட்டுகளையும் நுவான் பிரதீப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 199 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலகுவான இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, 44.5 ஓவர்களில், ஐந்து விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 202 ஓட்டங்களைப் பெற்று ஐந்து விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் குசல் ஜனித் பெரேரா 49 ஓட்டங்களையும் திஸர பெரேரா ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் சிம்பாப்வே அணி சார்பில் முஸரபனி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப் போட்டி இலங்கை அணிக்கு இவ்வாண்டில் பெறப்பட்ட முதலாவது வெற்றி என்பதுடன் புதிய பயிற்றுவிப்பாளராக ஹத்துரு சிங்க பெறுப்பெடுத்த நிலையில் பெறப்பட்ட முதலாவது வெற்றி என்பது முக்கியமானது.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக திஸர பெரேரா தெரிவு செய்யப்பட்டார்.