புதுடெல்லியில், பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை பத்துப் பெண்கள் உட்பட பதினேழு பேர் உயிரிழந்துள்ளனர். தொழிற்சாலையினுள் சிக்கியுள்ள ஏனைய தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றவண்ணமுள்ளன.

டெல்லியின் வடமேற்குப் பகுதியில் உள்ள பாவனா கைத்தொழிற்பேட்டையில் அமைந்துள்ள பட்டாசுத் தொழிற்சாலையிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் ஜன்னல்கள் எதுவும் இல்லாத காரணத்தாலும் மாடிப் படிகளில் அட்டைப் பெட்டிகள் மற்றும் மருந்துப் பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதாலும் சிக்கியுள்ள ஊழியர்கள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தையடுத்து உயிர் பிழைப்பதற்காக மாடியில் இருந்து சில ஊழியர்கள் குதித்ததாகவும், ஓரிருவர் எலும்பு முறிவுகளுக்கு முகங்கொடுத்திருப்பதாகவும் ஏனையோரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பதினைந்து நாட்களுக்கு முன்னரே இந்தத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டதாகவும் எவ்வித பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் இன்றி தொழிற்சாலை இயங்கி வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, தொழிற்சாலை உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை, குறித்த தொழிற்சாலை தமக்குச் சொந்தமானது என்றும் அது குறித்து எந்த விமர்சனத்தையும் முன்வைக்க வேண்டாம் என்று, பா.ஜ.க. பிரதேச தலைவியான ப்ரீத்தி அகர்வால் தொலைக்காட்சி நேரலையில் இரகசியமாக சக உறுப்பினர்களிடம் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.