இலங்கை, பங்­க­ளாதேஷ் மற்றும் ஸிம்­பாப்வே ஆகிய மூன்று அணிகள் பங்­கு­கொள்ளும் முத்­த­ரப்புத் தொடரின் தீர்­மா­ன­மிக்க போட்­டியில் இலங்கை கிரிக்கெட் அணி, ஸிம்­பாப்வே கிரிக்கெட் அணியை இன்று சந்­திக்­க­வுள்­ளது.

பங்­க­ளாதேஷ் தலை­நகர் மிர்­பூரில் நடை­பெற்று வரும் இப்­போட்டித் தொடரின் நான்­கா­வது போட்டி இன்று இலங்கை நேரப்­படி முற்­பகல் 11.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

சர்­வ­தேச ஒருநாள் அரங்கில் ஸிம்­பாப்வேக்கு எதி­ராக தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்­வியை சந்­தித்­துள்ள இலங்கை அணி இன்று வெற்றி பெற வேண்­டிய கட்­டா­யத்தில் கள­மி­றங்­கு­கி­றது.

புதிய பயிற்­றுநர், புதிய தலைவர் என வீராப்­புடன் கள­மி­றங்­கிய இலங்கை அணி, ஸிம்­பாப்வே அணி­யு­ட­னான போட்­டியில் துடுப்­பாட்­ட வீரர்­க­ளது அச­மந்தப் போக்­கினால் வெற்றி பெற வேண்­டிய போட்­டியில் தோல்­வியைத் தழு­வி­யி­ருந்­தது. 

இதை­ய­டுத்து சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­கவின் பயிற்­றுவிப்பின் கீழ் சர்­வ­தேச கிரிக்­கெட்டில் வெகுண்டு எழுந்த பங்­க­ளாதேஷ் அணி, கடந்த வெள்­ளி­யன்று இலங்­கைக்கு எதி­ரான போட்­டியில் அபார வெற்­றியை பதிவு செய்து, தமது முன்னாள் பயிற்­று­ந­ருக்கு தக்க பாடத்தை புகட்­டி­யுள்­ள­தாக கிரிக்கெட் விமர்­ச­கர்கள் கரு­து­கின்­றனர்.

இப்­போட்­டியில் இலங்கை வீரர்­களின் பந்­து­வீச்சு, துடுப்­பாட்டம், களத்­த­டுப்பு என அனைத்து துறை­க­ளிலும்  சோடை­போ­யி­ருந்­தது. களத்­த­டுப்பில் இல­கு­வான பிடி­யெ­டுப்­பு­களை தவ­ற­வி­டப்­பட்­டமை எந்த வகை­யிலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.  இவ்­வாறு இல­கு­வான பிடி­யெ­டுப்­புகள் தவ­ற­வி­டப்­ப­டும்­போது, பந்­து­வீச்­சா­ளர்கள் களைத்­து­வி­டுவர் என்­பதை மறந்­து­வி­ட­லா­காது. அத்­துடன் துடுப்­பாட்­டத்தில் தனி­ந­ப­ரொ­ருவர் சத­மொன்றை அடிப்­பதை பார்க்­கிலும், நிலை­யான இணைப்­பாட்­ட­மொன்று மேற்­கொள்­ளப்­பட வேண்­டி­யது முக்­கி­ய­மா­ன­தாகும். 

இது இலங்கை துடுப்­பாட்ட வீரர்­க­ளிடம் காணப்­படும் பெரும் குறை­யாகும். பங்க­ளா­தே­ஷு­ட­னான போட்­டியில் குசல் பெரேரா 32 பந்­து­களில் 50 ஓட்­டங்­களை பெற்­றி­ருந்தார். இருப்­பினும் தான் 80 ஓட்­டங்­களை பெற்று ஆட்­ட­மி­ழக்­கையில் 83 பந்­து­க­ளுக்கு முகம்­கொ­டுத்தார். ஏன் இந்த நிலைமை என்று ஆராய்ந்து பார்த்தால், அடுத்­து­வ­ரு­ப­வர்கள்  நிலைத்து நின்று விளை­யா­டாமல் தமது விக்­கெட்­டு­களை தாரை வார்ப்­ப­துடன், ஓட்ட வேகத்தை சீராக வைத்­துக்­கொள்­ளாமல், மெது­வாக துடுப்­பெ­டுத்­தா­டு­த­லாகும். இவற்­றி­லி­ருந்து இலங்கை துடுப்­பாட்ட வீரர்கள் தங்­களை சரி செய்து, நிலை­யான ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்த வேண்டும்.

கடந்த இரண்டு போட்­டி­களில் அடைந்த தோல்­வி­களின் மூலம் பெற்­றுக்­கொண்ட, பாடங்­களை மனதில் நிலை­நி­றுத்தி எதிர்­வரும் போட்­டி­களில் விளை­யாட இலங்கை வீரர்கள் தங்­களை தயார்­ப­டுத்­திக்­கொண்டு விளை­யாட வேண்டும்.

ஸிம்பாப்வே அணிக்கெதிரான தீர்மானமிக்க இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மாத்திரமே இந்த முத்தரப்பு போட்டியில் இலங்கை அணி நிலைத்து  நிற்க முடியும். மாறாக தோல்வியடைந்தால், இலங்கை அணி பங்களாதேஷுடனான போட்டியில் வெற்றி பெற்றாலும் பயனற்றதாகி போய்விடும்.