உத்தரப் பிரதேசம், சஹரன்பூரில், தமது உத்தியோகபூர்வ வாகனத்தில் இரத்தக் கறை படிந்துவிடக் கூடாது என்பதற்காக, விபத்தில் சிக்கிய பதினேழே வயது நிரம்பிய இரு இளைஞர்களைக் காப்பாற்றாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள காணொளியொன்றில், விபத்தில் சிக்கி இரத்த வெள்ளத்தில் கிடக்கும் இரண்டு இளைஞர்களை, மூன்று பொலிஸார் வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கும் காட்சி பதிவாகியுள்ளது.

பொலிஸாரின் உத்தியோகபூர்வ வாகனம் அருகில் இருப்பதையும் பாதிக்கப்பட்ட இருவருக்கும் அறிமுகமான ஒருவர் அவர்களைக் காப்பாற்றுமாறு பல முறை கெஞ்சிக் கேட்டுக்கொண்டபோதும் பொலிஸார் எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் வாளாவிருந்ததும் அதில் பதிவாகியுள்ளது.

விபத்து இடம்பெற்றபோது அங்கு பொலிஸாரின் வாகனத்தைத் தவிர வேறெந்த வாகனமும் காணப்படவில்லை. இதையடுத்தே உயிருக்குப் போராடியபடி இருந்த இளைஞர்கள் இருவரையும் பொலிஸ் வாகனத்திலேயே வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லுமாறு கேட்டதாகவும் வாகனத்தை தாமே சுத்தப்படுத்தித் தருவதாகவும் அப்பகுதிவாசிகள் கூறியும் பொலிஸார் அதைக் காதில் கேட்காமல் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சில நிமிடங்களின் பின்னர் மற்றொரு பொலிஸ் வாகனம் வந்து, இளைஞர்கள் இருவரையும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றபோதும் ஏற்கனவே அவர்கள் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

இச்சம்பவத்தையடுத்து சம்பந்தப்பட்ட மூன்று பொலிஸாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.