எந்தவொரு வழக்கின் தீர்ப்பும் மூன்று வருடங்களுக்குள் வழங்கப்படவேண்டும் என்ற புதிய திருத்தத்தை சட்டத்துறையில் அமுல்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஹோமாகமயில் நேற்று (19) நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“ஊழல்வாதிகள் மீது வழக்குத் தொடர்ந்தாலும் அது எட்டு வருடங்கள் வரை முடிவடையாது என்று கூறுகிறார்கள். இதற்காகவே, புதிய சட்ட திருத்தம் ஒன்றைக் கொண்டுவரவுள்ளோம். 

“அதன்படி, பொலிஸ் ஆவணங்களை நீதிபதிகளே நேரடியாகச் சரிபார்த்து அவற்றை உச்ச நீதிமன்றம் வரை அனுப்ப முடியும். அவ்வாறு அனுப்பப்படும் வழக்குகளை மூவர் அடங்கிய அமர்வு விசாரணை செய்யும். ஒத்திவைப்புகள் எதுவுமின்றி, அடுத்தடுத்த நாட்கள் தொடர்ச்சியாக இந்த விசாரணைகள் நடத்தப்பட்டு தீர்ப்பு அளிக்கப்படும்.

“தேவைப்பட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட நீதிமன்றங்களையும் உருவாக்கி வழக்குகளை விசாரணை செய்ய வழிவகை செய்யப்படும். இதன்மூலம், எந்தவொரு வழக்கிலும் ஆகக் கூடியது மூன்று வருடங்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும்.”

இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.