வவுனியா பழைய பஸ் நிலைய கடைத்தொகுதிக்களிற்கு செல்லும் பாதைகளில் ஒன்று உடையும் அபாயம் காரணமாக நகர சபையினால் கடந்த பல மாதங்களாக மூடப்பட்டுள்ளது. இதன்காரணமாக இப்பாதையில் புகைத்தல் மற்றும் மது பாவனை போன்ற பல சட்ட விரோத செயற்பாடுகள் நடைபெறுவதாகவும் தாம் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் அப்பகுதி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும்  பயணிகள் நகரசபையின் மலசல கூட தொகுதிக்கு செல்ல இலகுவான இப்பாதை தற்போது மூடப்பட்டமையால் வர்த்தகர்களும் பிரயாணிகளும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

மாற்று பாதையினூடாக மேல் மாடியில் உள்ள வர்த்தக தொகுதிக்கு மக்கள் செல்ல வேண்டியிருப்பதன் காரணமாக பல வர்த்தக நிலையங்களில் வியாபார நடவடிக்கை பாதிப்படைந்துள்ளதுடன், சில வர்த்தகர்கள் தமது தொழிலை இழக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

பழைய பஸ் நிலையத்தில் தற்போது பஸ் சேவைகள் இடம்பெறாமையினால் அதிகளாவான வர்த்தகர்களின் வியாபரம் பாதிப்படைந்து வாழ்வாதாரத்திற்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்ளும் நிலையில் இப்பாதை மூடப்பட்டுள்ளமையால் மேலும் வியாபாரம் பாதிப்படைவதாகவும் வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்நிலையினை தவிர்ப்பதற்கு வவுனியா நகரசபை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி வர்த்தகர்கள் கேட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபையின் செயலளாரிடம் கேட்டபோது,

இது தொடர்பாக கட்டிடங்கள் திணைக்களமே நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளமையால் அவர்களுக்கு பல மாதங்களுக்கு முன்னரே தன்னால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் எனினும் கட்டிடங்கள் திணைக்களத்தின் பொறியிலாளர் பார்வையிட தாமதமாகிவருவதால் தாம் புனரமைப்பு பணியை செய்யமுடியாதுள்ளதாகவும் தெரிவித்தார்.