தாம் கொண்டுவந்த வருடாந்த மத்திய வரவு-செலவுத் திட்டம் அமெரிக்க செனட் சபையில் ஏற்றுக்கொள்ளப்படாததையடுத்து, ட்ரம்ப் அரசின் நிர்வாகச் செயற்பாடுகள் முடக்கப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ட்ரம்ப் அரசு பதவியேற்ற ஒரு வருட நிறைவில் இந்த நெருக்கடி நிலை தோன்றியிருப்பது நோக்கற்பாலது.

மேற்படி வரவு-செலவுத் திட்டம் அமெரிக்க நேரப்படி நேற்று முன்தினம் (18) செனட் சபையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எனினும், ட்ரம்ப்பின் முன்னைய முடிவுகளால் அதிருப்திக்குள்ளாகியிருந்த எதிர்க்கட்சியினர் வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்காததால், அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய அரசு துறை நிறுவனங்களை மூட வேண்டிய நிர்ப்பந்தம் ட்ரம்ப் அரசுக்கு உண்டாகியுள்ளது.

“இந்த நெருக்கடி நிலைக்கான முழுப் பொறுப்பையும் ஜனநாயகக் கட்சியே (எதிர்க்கட்சி) ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசிய பாதுகாப்பு, இராணுவ வீரர்களின் குடும்பங்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் நலனைக் காட்டிலும் அவர்களுடைய அரசியல் இலாபமே முக்கியமாக அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. இந்த நெருக்கடி நிலையை உருவாக்கியதன் மூலம், நாட்டின் அனைத்து மக்களுக்கும் அரசு செய்ய முயற்சிக்கும் சேவையைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்” என, வெள்ளை மாளிகையின் ஊடகப் பேச்சாளர் சாரா சேண்டர்ஸ் தெரிவித்தார்.

இந்த நெருக்கடி நிலையால், மூடப்பட்டிருக்கும் அரச நிறுவனங்களின் ஊழியர்கள் சம்பளம் அற்ற கட்டாய விடுமுறையில் வீடு செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.