ஜோர்டான் ஆற்றில் இயேசு நாதர் திருமுழுக்குப் பெற்றதை நினைவுகூரும் சமயச் சடங்கில் கலந்துகொண்ட ரஷ்ய ஜனாதிபதி வ்ளாடிமிர் புட்டின், நேற்று (19) அதிகாலை இருள் அகலுமுன், கடுங்குளிரான ஆற்று நீரில் முங்கி எழுந்தார்.

ரஷ்யாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள செலிகர் ஆற்றுப் பகுதிக்கு நேற்று அதிகாலை வந்த புட்டின், ஆற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மேடையில் ஏறி, பத்திரிகையாளர்கள் மற்றும் சமயத் தலைவர்கள் சூழ்ந்திருக்க ஆற்றினுள் இறங்கினார்.

இடுப்பளவுத் தண்ணீரில் இறங்கி நின்ற அவர், இயேசுவை வணங்குமுகமாக சிலுவை அடையாளத்தை இட்ட பின், ஆற்றினுள் முழுமையாக முங்கினார்.

குளித்து முடித்த பின் ஆற்றை விட்டு வெளியேறிய அவர், எவ்வித நடுக்கமுமின்றி மிகச் சாதாரணமாக ஆடை மாற்றச் சென்றதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

மேலைத்தேய நாடுகள் பலவற்றிலும் இந்தச் சடங்கு ஜனவரி ஆறாம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. எனினும், ஜனவரி 7ஆம் திகதியை நத்தார் பண்டிகையாகக் கொண்டோடும் க்ரகோரியன் நாட்காட்டியைப் பின்பற்றுபவர்கள், இச்சடங்கை ஜனவரி 19ஆம் திகதியே அனுஷ்டிக்கின்றனர்.

இதை முன்னிட்டு ரஷ்யாவின் பல பகுதிகளிலும் இதுபோன்ற ஸ்நானச் சடங்குகள் இடம்பெற்றன.

குறிப்பாக, உலகின் நிரந்தர உறைபனி நிலவும் கிராமமாகக் குறிப்பிடப்படும் ரஷ்யாவின் யக்குஷியாவில், கண் இமைகளும் உறைந்துவிடும் -58 பாகை வெப்ப நிலையிலும் உறைந்த ஆறுகளில் மக்கள் முங்கி எழுந்து இச்சடங்கை நிறைவேற்றினர்.