முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது போட்டியிலும் இலங்கை அணி தோல்வியைச் சந்தித்துள்ளது.

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில், சற்று முன் நிறைவடைந்த அந்நாட்டு அணியுடனான போட்டியில் இலங்கை அணி மூன்று விக்கட்கள் மற்றும் 163 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாடக் களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தில் இறங்கிய பங்களாதேஷ் வீரர்கள், ஐம்பது ஓவர் முடிவில் ஏழு விக்கட்களை மட்டுமே இழந்து 320 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அவ்வணியின் அனுபவமிக்க வீரர்களான தமீம் இக்பால் (84), ஷகீப் அல் ஹஸன் (67), விக்கட் காப்பாளரான முஷ்பிக்குர் ரஹீம் (62) நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். 

பின்வரிசை வீரர்களும் தம் பங்குக்கு ஓட்டங்களைச் சேகரிக்க, மொத்த எண்ணிக்கை 320 ஆக உயர்ந்தனர்.

சிறிபாத இலக்கை நோக்கிக் களமிறங்கிய இலங்கை அணியின் குசல் பெரேரா, மூன்று பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 1 ஓட்டத்துடன், நஸீல் ஹொஸைனின் துல்லியமான பந்துவீச்சில் விக்கட்டைப் பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்தடுத்து வந்த வீரர்களும் பத்துக்கும் இருபதுக்கும் ஆட்டமிழந்து தோல்வியை உறுதிசெய்தனர்.

அணித் தலைவர் தினேஷ் சந்திமால் 28 ஓட்டங்களையும் அதிக பட்சமாக 29 ஓட்டங்களை திஸர பெரேராவும் பெற்றனர்.

துடுப்பாட்டத்தில் மட்டுமன்றி, பந்துவீச்சிலும் திறமை காட்டிய ஷகீப் அல் ஹஸன், 47 ஓட்டங்களுக்கு 3 விக்கட்களைப் பறித்தார்.

வெறும் 32.2 ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்த இலங்கை அணி 157 ஓட்டங்களை மட்டுமே பெற்று, சுற்றுப் போட்டியின் இரண்டாவது தொடர் தோல்வியையும் அடைந்தது.