பிறந்தவுடனேயே பெற்றோரால் கைவிடப்பட்ட இந்தியர் ஒருவர் ஸ்விட்ஸர்லாந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நிக்கலஸ் சாமுவேல் கூகர் (48) டெல்லியில் பிறந்தவர். அவரைப் பராமரிக்க வசதியற்ற அவரது பெற்றோர், நிக்கலஸ் பிறந்த சில மணி நேரங்களிலேயே மருத்துவர் ஒருவரிடம் அவரை ஒப்படைத்துச் சென்றுவிட்டனர்.

நிக்கலஸ் பிறந்த பதினைந்தாவது நாள் ஸ்விட்ஸர்லாந்து தம்பதியர் அவரைத் தத்தெடுத்துக்கொண்டனர். எனினும் அவர்களும் பொருளாதாரச் சிரமங்கள் மிகுந்த குடும்பத்தினரே!

நான்கு வருடங்கள் கேரளாவில் வசித்த அவர்கள், தம் சொந்த நாட்டுக்குத் திரும்பினர். அங்கு சாரதியாகவும் தோட்ட வேலைகளைச் செய்தும் தனது உயர் கல்வியைப் பெற்றுக்கொண்டார் நிக்கலஸ்.

சமூகத் தொண்டில் ஈடுபாடு கொண்ட நிக்கலஸுக்கு இன விகிதாசாரப்படி பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்துள்ளது.

ஸ்விட்ஸர்லாந்து அரசியலில் ஆர்வம் காட்டும் இந்தியர்கள் யாரும் இதுவரை இல்லை என்பதால், அடுத்த பத்து வருடங்களுக்கு நிக்கலஸ் பதவி வகிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.