விளையாட்டுத்துறையில் தற்காலிக தீர்வை மட்டுமே முன்வைக்கும் அரசாங்கமாக எமது அரசாங்கம் உள்ளதென பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

முன்னாள் தடகள பயிற்றுவிற்ப்பாளர் யோகனந்த விஜயசூரியவை கௌரவிக்கும் நிகழ்வு ஒலிம்பிக் இல்லத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வை தன்னார்வ அமைப்பொன்று 'எதிர்கால விளையாட்டின் சுபீட்சம்' என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்திருந்தது. 

இதில் பிரதம விருந்தினராக பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க பங்குபற்றியிருந்தார்.

இந் நிகழ்வில் உரையாற்றும் போதே பெற்றோலிய வளங்கள் மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

'கடந்த காலங்களில் பல அரசியல்வாதிகள் விளையாட்டு வீரர்களைப் பற்றி விமர்சனங்கள் செய்தனர். 

பந்து வீச தெரியாத, துடுப்பாட்டம் ஆடத் தெரியாதோர் நினைத்தனர் மைதானத்தில் இலகுவாக விளையாட முடியும் என்று. அப்படி இலகுவாக செய்யதுவிட முடியாது. 

எனக்குத் தெரியும் சிலர் சுசந்திகா ஜயசிங்கவிற்கும் பல விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். அப்படி பேசியவர்கள் விளையாடியவர்களா? எங்கே நாம் போகின்றோம்?  இந்த நாட்டு மக்களே அரசியல் வாதிகளை தேர்தெடுக்கின்றனர். 

மக்களுக்கு முழு உரிமையும் உண்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்களைகள் மீது. விளையாட்டு வீரர்களுக்கு எதிராக விமர்சனங்கள் எழுகின்றதென்றால் மக்கள் அறிந்திருக்க வேண்டும் சரியான அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே. இதுவே எனது அரசியல் குறிக்கோளுமாகும்.

இன்று பாருங்கள் தேசிய வீரர்களை தேர்வு செய்யும்போது நிர்வாக குழுவில் உள்ள எத்தனைபேருக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியும். அதுபோல வெளியிடங்களிலும் என்ன நடந்துள்ளது.  

இதனால் தான் இன்று கிரிக்கட் விளையாட்டு கீழ்நிலை நோக்கிச் செல்கின்றது. ஆனால் நினைக்க வேண்டாம் கிரிக்கட் விழ்ந்து விட்டதென்று. அது இன்னும் விழவில்லை. வீழ்வதற்கு சில காலம் எடுக்கும். 

நாளை வெற்றிபெற்றால் ஹத்துருசிங்க அதிசயம் செய்துவிட்டார் என்று சொல்வர் அல்லது தோல்வியடைந்தால் முடிந்துவிட்டது என்று சொல்வர். 

ஆனால் உண்மையில் எமக்குத் தெரியும் இது சிறிய காயத்துக்கான மருந்து தடவும் விடயம் என்று. ஆனால் மருந்து தடவினாலும் சுகமாகப்போவது கிடையாது. யாருக்கும் இதனை குணமாக்க விருப்பமில்லை. 

இந்த விடயம் தடகளப் போட்டியிலும் உள்ளது. ரக்பியிலும் உள்ளது. டெனிசிலும் உள்ளது.  விளையாட்டுத் துறையிலும் தற்காலிக தீர்வை மட்டுமே வழங்கும் அரசாங்கமாக மாறியுள்ளது எமது அரசாங்கம்.

இதை நான் விளையாட்டுப் பக்கம் இருந்து பொறுப்புடன் சொல்கின்றேன். துரதிஷ்டவசமாக நான் இந்த அரசாங்கத்தில் உள்ளேன்.  எனக்கும் மிகவும் வேதனையாக உள்ளது. 

கடந்த காலத்திலேதான் எமது வீரர்கள் நிறைய விமர்சனங்களுக்கு முகங்கொடுத்தனர். ஆகவே நாங்கள் எல்லோரும் ஒன்றிணைந்தால்தான் இந்த விமர்சனங்களை நிறுத்தமுடிம்.  ஆனால் இதனைச் சலுகைகளுக்குப் பின்னால் சென்றால் சரிசெய்ய முடியாது.  ' என்று அமைச்சர் தனது கருத்தை தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வின் போது பயிற்சியாளர் யோகனந்த விஜயசூரியவிற்கு தன்னார்வ அமைப்பின் சார்பாக, அமைச்சரின் கையால் நினைவுப் பரிசில் வழங்கி கொளரவிக்கப்பட்டது. 

இந்நிகழ்விற்கு முன்னாள் ஓட்டப்பந்தய வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.