நுவரெலியா - நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிரிமிட்டிய நகரத்தில் நீண்டகாலமாக கசிப்புத் தயாரிப்பில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படும் நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் 16ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளதாக  நுவரெலியா விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.

இதன்போது கொள்கலன்கள், மற்றும் கசிப்பு உற்பத்திப் பொருட்களையும் விசேட அதிரடி படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை கைப்பற்றப்பட்ட கசிப்பு,  கொள்கலன்களில் நிரப்பப்பட்டு நிலக்கீழ் குழிகளில் புதைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் விசேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.

கசிப்பு விற்கும் தொழிலை இவர்கள் மேற்கொள்வது குறித்து முறைப்பாடுகள் கிடைத்ததைத் தொடர்ந்து,  இவர்களை பலமுறை எச்சரித்தாகவும் ஆனால், அவர்கள் தொடர்ந்தும் இச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததால் விசேட அதிரடி படையினரின் உதவியுடன் இச் சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.