கடற்படைக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், இந்திய நாட்டுப் படகு ஒன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளது. அதில் பயணித்த மூன்று மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப் பொருள் கடத்தப்படுவதாக கடற்படைக்கு இரகசியத் தகவல் ஒன்று கிடைத்தது. இதையடுத்து, அதில் குறிப்பிடப்பட்டிருந்ததற்கிணங்க, மன்னாருக்கு தென்கிழக்கே தேடுதலை மேற்கொண்ட கடற்படையினர், அப்பகுதியில் தரித்திருந்த இந்திய நாட்டுப் படகொன்றை சோதனையிட்டனர்.

படகில் பயணித்த மூன்று மீனவர்களில் ஒருவர், சுமார் அரை கிலோ எடையுள்ள ஹெரோயினைத் தனது உடலில் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, மீனவர்கள் மூவரையும் கைது செய்த கடற்படையினர், குறித்த படகையும் பறிமுதல் செய்தனர்.

மீனவர்கள் மூவரும் தற்போது தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் நடுக்கடலில் வைத்து போதை மருந்தை இலங்கையர் ஒருவருக்குக் கைமாற்ற இருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.