சபை தலைமையகத்தில் நேற்று (17) இடம்பெற்ற சம்பவத்தில், ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில், அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறி, மின்சார சபை ஊழியர் சங்கங்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன.

சம்பள விவகாரம் தொடர்பாக எழுந்த பிரச்சினையில், இலங்கை மின்சார சபை தலைவரை ஊழியர்கள் சிலர் தலைமையகத்தில் சிறைப்பிடித்தனர். சுமார் ஐந்து மணிநேரம் இந்த சிறைப்பிடிப்பு தொடர்ந்தது.

இதையடுத்து, கலகம் அடக்கும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டு தலைவர் மீட்கப்பட்டார். இதன்போது, மின்சார சபை ஊழியர்கள் சிலர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இதை உறுதிப்படுத்தும் விதமாக, நேற்று இரவு மின்சார சபை ஊழியர்கள் ஐந்து பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டபின் வெளியேறியதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இத்தாக்குதலைக் கண்டிக்கும் வகையில், மின்சார சபை தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் இன்று (18) முதல் வேலை நிறுத்தத்தில் குதிப்பதாக அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று காலை முதல் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் இ.மி.ச. தொழிற்சங்கங்கள் குதித்துள்ளன.

எவ்வாறெனினும் எந்தவொரு வேலை நிறுத்தத்துக்கும் முகங்கொடுக்கத் தாம் தயாராக இருப்பதாக சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்சனா ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.