தென்னாபிரிக்காவுக்கு எதிராக செஞ்சூரியனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியைத் தழுவியதன் மூலம், தொடரைப் பறிகொடுத்தது ‘புது மாப்பிள்ளை’ கோலி தலைமையிலான இந்திய அணி!

இரண்டாவது போட்டியில், வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 287 ஓட்டங்களைப் பெறுவதற்கு அனைத்து வாய்ப்புகளும் இருந்த நிலையில், 151 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்களையும் இழந்து மண்ணைக் கௌவியது இந்திய அணி!

முதல் இனிங்ஸில் தென்னாபிரிக்கா பெற்ற 335 ஓட்டங்களுக்கு பதிலாக இந்தியா 307 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. எனினும் ஷமி, பும்ராவின் பந்துவீச்சில் இரண்டாவது இனிங்ஸில் தென்னாபிரிக்கா 258 ஓட்டங்களுக்குள் சரிந்தது.

இதையடுத்து, நான்காவது நாளிலேயே 287 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. எனினும் நான்காவது நாள் ஆட்டம் நிறைவடைவதற்குள் நட்சத்திர வீரர்கள் முரளி விஜய் (9), லோகேஷ் ராஹுல் (4) மற்றும் தலைவர் கோலி (5) ஆகியோர் விக்கட்களை இழந்தனர்.

ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று ஆரம்பமானது. 252 ஓட்டங்களைக் குறிவைத்து இறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதல் சீரான இடைவெளியில் விக்கட்களை இழந்தது.

இறுதியில், 151 ஓட்டங்களை மட்டுமே பெற்று ஒட்டு மொத்த விக்கட்களையும் இழந்து, 135 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது இந்தியா! இதன்மூலம், மூன்று போட்டிகள் அடங்கிய தொடரையும் இழந்தது.

கோலியில் ஆரம்பித்த வேட்டையை, இறுதி ஆட்டக்காரர் பும்ரா வரை தொடர்ந்த தென்னாபிரிக்க பந்துவீச்சாளர் லுங்கி ஜிடி, 39 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து ஆறு விக்கட்களைக் கைப்பற்றினார்.

மூன்றாவதும் இறுதியுமான போட்டி 24ஆம் திகதி ஜோஹன்னஸ்பேர்கில் ஆரம்பமாகிறது.