(ரொபட் அன்டனி)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து கோபமடைந்ததால் வெளியேறிச் செல்லவில்லை அவர் இயற்கைத் தேவையை நிறைவுசெய்வதற்காகவே அங்கிருந்து வெளியேறினார் என சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

ஊடக மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ராஜித்த மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி கோபமடைந்ததால் அங்கிருந்து வெளியேறவில்லை. அவர் இயற்கைத் தேவையை நிறைவேற்றவே அங்கிருந்து வெளியேறினார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை விமர்சித்தமை தொடர்பில் சிறு குழுப்பம் இருந்தது. 

இதனால் ஜனாதிபதி வேதனை அடைந்தார். அதனால் தான் அவர் சிறு கூற்றொன்றை முன்வைத்து அமைச்சரவையில் விசேட உரையாற்றினார்.

தேசிய அரசாங்கம் என்பது இலங்கையில் இடம்பெறும் அரசியலில் ஒரு புதிய விடயம். உலகத்தில் ஜேர்மன், ஒஸ்ரியா மற்றும் இலங்கையில் மாத்திரமே இந்த தேசிய அரசாங்கம் உள்ளது.

தேசிய அரசாங்கத்தைப்பற்றிய தெளிவான விளக்கம் எமது பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இல்லை. 

பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஐக்கிய தேசியக்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஸ்ரீலங்க சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் விளக்கமளித்தனர் என அவர் மேலும் தெரிவித்தார்.