இன்று இரு சிறந்த சட்டப் பேச்­சா­ளர்­க ளின் கருத்­துக்­களைச் செவி­ம­டுத்­துள்­ளீர்கள். இரு முக்­கி­ய­மான விட­யங்கள் பற்றி ஆராய்ந்­துள்ளோம். ஒன்று இலங்­கையின் பெரும்­பான்­மை­யி­னரின் பக்கச் சார்­பான தொடர் நட­வ­டிக்­கை­க­ளினால் பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் தமிழ் மக்­க­ளுக்கு சர்­வ­தேசச் சட்டம் எந்த அள­வுக்கு நன்மை புரி­கின்­றது, அதனை முன்­வைத்து எவ்­வாறு நாம் எமது இழந்த உரி­மை­களைப் பெற­மு­டியும் என்­பது பற்­றி­யது. 

Image result for wigneswaran virakesari

அடுத்­தது இடைக்­கால வரை­வுகள் பற்­றி­யது. இடைக்­கால வரை­வுகள் பற்றி கூறித்­தி­ரி­வது உண்­மையா அல்­லது உண்மை வேறா என்­பதை ஆராய்ந்­துள்ளோம். இரு பேச்­சா­ளர்­களும் தமது கருத்­துக்­களை ஆணித்­த­ர­மாக முன்­வைத்­துள்­ளார்கள். இவற்­றி­லி­ருந்து பொது­மக்­க­ளா­கிய உங்­க­ளுக்கு அவை பற்­றிய தெளிவும் புரிந்­து­ணர்வும் ஏற்­பட்­டி­ருக்க வேண்டும் என்று நாம் எதிர்­பார்க்­கின்றோம். 

எனது தொகுப்­பு­ரையில் அவர்கள் கூறிய சில விட­யங்­களை மீண்டும் வலி­யு­றுத்த விரும்­பு­கின்றேன். அந்த விதத்தில் எம்முள் பலர் ஒத்த கருத்­தையே உடையோம் என்­பதில் மகிழ்­வ­டை­கின்றேன். எனினும் எனது தொகுப்­பு­ரையின் பின்னர் மக்­க­ளா­கிய உங்கள் கேள்­விகள் பரி­சீ­லிக்­கப்­ப­டும். எமது கருத்தை ஏற்­கா­த­வர்கள் தமது கருத்தின் அடிப்­ப­டையில் கேள்­வி­களை எழுத்து மூல­மாகக் கேட்­கலாம். 

சர்­வ­தேச சட்­டத்தைப் பார்த்­தோ­மானால் இன்று அது பல வழி­க­ளிலும் விரி­வ­டைந்து வரு­கின்­றது என்­பதை அவ­தா­னிப்போம். சர்­வ­தேச சட்டம் என்­றா­லேயே பாரம்­ப­ரி­ய­மா­கவோ உடன்­பா­டுகள் மூல­மா­கவோ ஒன்று சேர்ந்த ஒரு தொகை விதி­க­ளையே அடிப்­ப­டையில் அது குறிப்­பிடும். இந்த விதி­களைக் கொண்டு நாடுகள் தம்­மி­டை­யே­யான உற­வு­களை வளர்க்கும் போது விதிகள் சட்ட அந்­தஸ்து பெறு­கின்­றன. 

அண்­மைக்­கா­லங்­களில் பல முக்­கிய மாற்­றங்கள் சர்­வ­தேசச் சட்­டத்தில் ஏற்­பட்­டுள்­ளன. பல நாடு­களில் ஏற்­பட்ட நெருக்­க­டிகள், அவற்­றினால் உலக மக்கள் மனதில் ஏற்­பட்ட தாக்­கங்கள் போன்­றவை இந்த மாற்­றத்­திற்குக் காரணம் ஆகி­விட்­டன. 1983ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் எமது அப்­போ­தைய பிர­தம நீதி­ய­ரசர் நெவில் சம­ரக்கோன் மத்­திய கிழக்கு நாடொன்றில் இருந்தார். அம் மாதம் 23ஆம் திக­திக்கு பின்­வந்த நாட்­களில் இலங்­கையில் நடை­பெற்ற கொடூ­ர­மான நிகழ்­வுகள் தொலைக்­காட்சி ஊடாக ஒளி பரப்­பப்­பட்­டு­வந்­தன. அது பற்றி அவர் பின்னர் என்­னிடம் கூறி­ய­போது எமது நாடு அந்தக் கால­கட்­டத்தில் நாறி­யது என்றார். வெட்­கப்­ப­டு­கின்றேன் என்றார். அவ்­வாறு நாடு­களில் நடந்­த­வற்றைப் பார்த்த சட்ட வல்­லு­நர்கள் பலர், சர்­வ­தேசச் சட்­டத்தை விரி­வாக்க வேண்டும் என்று எண்­ணிய கார­ணத்­தா­லேயே சர்­வ­தே­சச்­சட்டம் இப்­போது விரி­வ­டைந்த நிலையில் உள்­ளது.

 இதன் பிர­தி­ப­லிப்பே உலகக் குற்­ற­வியல் நீதி­மன்ற ஏற்­பாடு. அது­மட்­டு­மல்ல. நிலை­மாற்­றத்தின் போது பாதிப்­புக்­குள்­ளான நாடுகள் எடுக்க வேண்­டிய நட­வ­டிக்­கைகள் பற்றி இப்­பொ­ழுது வலு­வான கருத்­துக்கள் தோன்­றி­யுள்­ளன. 

நிலை­மாற்றம் என்றால் என்ன? ஒரு நாட்டின் அர­சியல் நிலையில், யதார்த்த நிலையில் மாற்றம் ஏற்­ப­டு­வ­தையே அது குறிக்­கின்­றது. ஒரு இருண்ட காலத்­தினுள் இருந்து வெளிச்­சத்தை நோக்கி எட்­டிப்­பார்ப்­ப­தையே நிலை­மாற்றம் குறிக்­கின்­றது. எனவே, நிலை­மாறும் நாடுகள் நீதிக்­கு­கந்­த­தாக எடுக்­க­வேண்­டிய நட­வ­டிக்­கை­களே நிலை­மாற்ற நீதி­மு­றைகள் ஆவன. இதையே Transitional Justice என்று ஆங்­கி­லத்தில் கூறு­வார்கள். கஷ்ட நிலையில் இருந்து ஒரு நாடு மீண்டு வரும்­போது என்­னென்ன நட­வ­டிக்­கை­களை நீதிக்­கு­கந்­த­தாக அந் நாட்டில் எடுக்க வேண்டும் என்று சர்­வ­தேச சட்டம் எதிர்­பார்க்­கின்­றதோ அவற்­றையே நிலை­மாற்ற நீதி­மு­றைகள் என்று குறிப்­பி­டு­கின்­றது சர்­வ­தே­சச்­சட்டம். 

யாரோ அடக்கி ஆளப்­பட்­ட­தால்தான் அந் நாட்டில் வன்­முறை வெடித்­தி­ருக்க வேண்டும் அல்­லது கிளர்ச்­சிகள், ஆர்ப்­பாட்­டங்கள் நடை­பெற்­றி­ருக்க வேண்டும் என்ற அடிப்­ப­டையில் நிலை­மாற்ற நீதி­மு­றைகள் இரண்டு முக்­கிய எதிர்­பார்ப்­புக்­களை முன்­னி­றுத்­தி­யுள்­ளன. ஒன்று அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்கம் மற்­றது போர்க்­குற்­ற­வா­ளி­களைத் தண்­டித்தல். 

இவற்றைச் சர்­வ­தேசச் சமூகம் இலங்­கை­யிலும் எதிர்­பார்க்­கின்­றது. போர் முடி­வுக்கு 2009இல் வந்­தி­ருப்­பினும் இனப்­பி­ரச்­சினை அதனால் தீர்க்­கப்­ப­ட­வில்லை. அத­னால்தான் அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்கம் தேவை­யு­டை­ய­தா­கின்­றது. தற்­போதும் 13ஆவது திருத்­தச்­சட்டம் அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யே­யுள்­ளது. ஆனால் அது பெரும்­பான்­மை­யி­னரின் பெருந்­த­யவை முன்­வைத்தே ஆக்­கப்­பட்­டுள்­ளது. அத­னால்தான் 1992இன் 58ஆவது இலக்கச் சட்­ட­மான மாவட்ட செய­லா­ளர்கள் பற்­றிய அதி­கா­ர­மாற்றச் சட்­டத்தை இயற்றக் கூடி­ய­தாக இருந்­தது. 

ஒற்­றை­யாட்சி எனும் போது முன்னர் கொடுத்த அதி­கா­ரங்­களைப் பறித்து இவ்­வா­றான சட்­டங்­களைக் கொண்­டு­வ­ரலாம். காரணம் ஒற்­றை­யாட்­சியின் கீழ் அதி­கா ரம் பெரும்­பான்­மை­யி­னரின் கைவ­சமே தொடர்ந்­தி­ருக்கும். மாகாண சபை­களின் அதி­கா­ரத்தின் கீழி­ருந்த மாவட்டச் செய­லர்கள் திடீ­ரென்று இந்தச் சட்டம் இயற்­றப்­பட்­டதும் மத்­திக்­கு­ரி­ய­வர்கள் ஆகி­விட்­டார்கள். இதனால் இன்று வட­மா­கா­ணத்தில் இரட்டை நிர்­வாகம் நடை­பெற்று வரு­கின்­றது. ஒன்று மக்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட மாகாண உறுப்­பி­னர்­களின் நிர்­வாகம் மற்­றை­யது மத்­திய அர­சாங்­கத்தின் முக­வர்­களின் நிர்­வாகம். இங்கு இரு முக­வர்கள் சேர்ந்தும் சேரா­மலும் அவர்கள் நிர்­வா­கத்தை நடத்தி வரு­கின்­றார்கள். ஆளு­நரும் மத்­தியின் முகவர். அர­சாங்க அதி­பரும் அவர்­களின் முக­வரே. 

ஆகவே, அதி­காரப் பர­வ­லாக்கம் என்ற போது நாம் எதிர்­பார்த்­தது நம்மை நாமே ஆண்­டு­வ­ரு­வ­தையே. ஆனால், ஒற்­றை­யாட்­சியின் கீழ் அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்கம் என்ற போர்­வையில் எமக்குக் கிடைத்­தது வேண்­டிய போது மத்­தியின் ஊடு­ரு­ வல்­களே. இவ்­வாறு ஊடு­ரு­வல்கள் தொட ர்ந்து இருந்தால் மீண்டும் மீண்டும் பாதிக்­கப்­ப­டப்­போ­கின்­ற­வர்கள் போருக்கு முன்னர் பாதிக்­கப்­பட்ட அதே மக்­களே. இத­னால்தான் ஒற்­றை­யாட்­சியைக் களைந்து சமஷ்டி ஆட்­சியை நிலை­நி­றுத்த வேண்டும் என்று கேட்டு வரு­கின்றோம். 

இடைக்­கால வரை­வுகள் ஒற்­றை­யாட்­சி­யி­னையே மைய­மாகக் கொண்டு வரை­யப்­பட்­ட­தால்தான் சர்­வ­தேச நாடுகள் போதிய அதி­கா­ரப்­ப­கிர்வு வழங்­கப்­பட வேண்டும் என்­பதில் கண்ணும் கருத்­து­மாக உள்­ளன. இப்­பொ­ழுது இன்­றைய பேச்­சா­ளர்­களின் பேச்­சுக்­களின் கருப்­பொ­ருட்­களின் ஒன்­றுக்­கொன்­றான தொடர்­பா­னது உங்­க­ளுக்குப் புரிந்­தி­ருக்கும் என்று நம்­பு­கின்றேன். 

சர்­வ­தேசச் சட்டம் எதிர்­பார்ப்­ப­தைத்தான் ஐக்­கிய நாடுகள் கூறி­யுள்­ளது. ஆர்­ஜென்­டீனா சர்­வா­தி­கா­ரத்தில் இருந்து வெளி­வந்த போது யூகோஸ்­லா­வியா, ருவண்டா மற்றும் கம்­போ­டியா போன்ற நாடு­களின் உள்­நாட்டுப் போர்­களில் இருந்து அவை விடு­பட்ட போது நிலை­மாற்ற நீதி­மு­றை கள் என்ற அடிப்­ப­டையில் ஐக்­கிய நாடுகள் தடை­களை விதித்­தன. உலகக் குற்­ற­வியல் மன்­றத்தை உரு­வாக்­கு­வதில் ஐக்­கிய நாடு கள் கரி­சனை காட்­டின. ஆகவே, சர்­வ­தேச சட்டம் நிலை­மைக்­கேற்­ற­வாறு, சூழ­லுக்­ கேற்­ற­வாறு மாறுதல் அடைந்து வந்­துள்­ ளது.

என­வேதான் சர்­வ­தேசச் சட்­டத்தின் கீழ் ஐக்­கிய நாடுகள் நிலை­மாற்ற நீதி­மு­றைகள் என்று எதிர்­பார்க்கும் அதி­காரப் பர­வலும் போர்க்­குற்ற விசா­ர­ணையும் எமக்கு முக்­கி­ய­மா­கி­யுள்­ளன. இரண்­டையும் தட்­டிக்­க­ழிக்­கவே இலங்கை அர­சாங்கம் முற்­பட்­டுள்­ளது. அதி­காரப் பர­வலில் நாம் எதிர்­பார்க்கும் சுதந்­திரம் எமக்கு மறுக்­கப்­பட விருக்­கின்­றது. மத்­தியின் மையத்­தினுள் மாகா­ணத்தை தொடர்ந்து வைத்­தி­ருக்­கவே அர­சாங்கம் மும்­முரம் காட்­டு­கின்­றது. ஆனால், எம்முள் சிலரோ அதற்­கென்ன நாங்கள் கொழும்­பில்­தானே வசிக்­கின்றோம், மத்­திய அர­சாங்கம் இங்கு தானே இருக்­கின்­றது, நாம் இங்கு சுதந்­தி­ர­மாக எப்­ப­டியும் வலம் வரலாம், ஆனால் மக்­க­ளுக்குச் சுதந்­திரம் கொடுத்தால் எமது சுதந்­திரம் பறி­போய்­விடும், எனவே அர­சாங்கம் சாட்­டையைத் தன் கைவசம் வைத்­தி­ருப்­பதை நாம் வர­வேற்­கின்றோம் என்ற பாணியில் நடந்­து­வ­ரு­கின்­றார்கள். அவர்­களின் நட­வ­டிக்கை காலா­கா­லத்தில் வட­கி­ழக்குத் தமிழ் பேசும் மக்­களின் சுதந்­தி­ரத்தைக் குழி­தோண்டிப் புதைத்­து­விடும் என்­பதை அவர்கள் உணர்­கின்­றார்கள் இல்லை. 

ஒற்­றை­யாட்­சியால் எமது மீன­வர்­களின் பாரம்­ப­ரிய மீன்­பிடி இடங்கள் பறி­போகப் போகின்­றன. படைகள் தொடர்ந்து எம் மாகா­ணங்­களில் நிலை­நிற்­கப்­போ­கின்­றன. எம் காணி­களின் வரு­மா­னங்கள் அவர்கள் கைவசம் செல்­ல­வி­ருக்­கின்­றன. மகா­வலி சட்­டத்தின் கீழ் மேலும் மேலும் வெளி­யி­லி­ருந்து மக்­களை எமது மாகா­ணத்­தினுள் கொண்­டு­வந்து குடி­யேற்ற இருக்­கின்­றார்கள். சுற்­று­லாவை தமக்குச் சாத­க­மாக வளர்த்துக் கொள்­ள­வி­ருக்­கின்­றார்கள். எம் மக்­களின் தொகைக் குறை­வினால் திணைக்­க­ளங்­களில் தென்­ன­வரை நிலை­நி­றுத்தி வரு­கின்­றார்கள். இந்த நிலை தொடரும். முன்­னேற்றம் என்ற போர்­வையில் எமது காணி­களைச் சுவீ­க­ரிக்க நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றார்கள். இன்னும் பல­தையும் கூறலாம். 

சமஷ்டி அர­சி­யலின் கீழ் சுயாட்சிச் சுதந்­திரம் அதி­கா­ரப்­ப­ர­வ­லாக்கல் மூலம் எமக்குத் தீர்வு கிடைத்தால் இவற்றைத் தடுத்து நிறுத்­தலாம். ஆனால், ஒற்­றை­யாட்­சியின் கீழ் அவை தடுக்­கப்­பட முடி­யாது. 

ஐக்­கிய நாடுகள் முன், தாமே முன்­வந்து செய்­வ­தாக ஏற்­றுக்­கொண்­ட­வற்றை இன்று செய்யப் பின் நிற்­கின்­றது எம் நாட்டின் அர­சாங்கம். 

அடுத்து போர்க்­குற்ற விசா­ர­ணை­க­ளையும் நிலை­மாற்ற நீதி முறை­மைகள் வலி­யு­றுத்­து­கின்­றன. அதைத் தட்­டிக்­க­ழிக்கப் பார்க்­கின்­றது எமது அர­சாங்கம். போர்க்­குற்­றங்கள் எத்­த­கை­யன என்­பது பற்­றி­யெல்லாம் பேரா­சி­ரியர் சுவர்­ண­ராஜா விளக்­கப்­ப­டுத்­தினார். போரை அநி­யா­ய­மான முறையில் வேண்­டு­மென்றே நடத்­து­வது போர்க்­குற்றம். அடுத்து மனித குலத்­திற்­கெ­தி­ரான செயல்­களில் ஈடு­ப­டு­வது போர்க்­குற்றம். மூன்­றா­வது வேண்­டு­மென்றே இன அழிப்பில் ஈடு­ப­டு­வது போர்க்­குற்றம். மூன்­றிலும் எமது அரச படைகள் ஈடு­பட்­டி­ருந்­தன. அக்­குற்­ற­வா­ளி­களை இனங்­காண எமது மத்­திய அர­சாங்கம் பின் நிற்­கின்­றது. 

இனப்­ப­டு­கொலை பற்­றிய விளக்­கமும் அண்மைக் காலங்­களில் விரி­வு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. பர்­மாவில் றோகின்­தியா கொலைகள், ஈராக்கில் யாசி­டி­யரின் வன்­பு­ணர்வு நிகழ்ச்­சிகள் இனப்­ப­டு­கொ­லையின் அம்­சமே என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 

ஆகவே, இன்­றைய பேச்­சுக்­களால் நாம் முக்­கி­ய­மான இரு விட­யங்­களைப் புரிந்­துள் ளோம். சர்­வ­தேசச் சட்டம் விரி­வ­டைந்­துள்­ளதால் எமது அல்­லல்­களும் அழி­வு­களும் அதனுள் அடங்­கு­வன என்ற முறையில் சர்­வ­தேசச் சட்­டத்தை ஒரு கேட­ய­மாக ஏந்தி மத்­திய அர­சுடன் மோத முடியும் என்­பது. அடுத்து இல்­லா­ததை இருப்­ப­தாகக் கூறி இனி­வ­ருங்­கா­லத்தில் இருப்­ப­தையும் இல்­லா­த­தாக்க நாம் உடன்­ப­டக்­கூ­டாது என்­பது. ஆகவே, சர்வதேசச் சட்டம் எதிர்பார்க்கும் நிலைமாற்ற நீதி முறைமைகளின் கீழ் முறையான அதிகாரப் பரவலாக்கத்தை முயன்று பெற நீங்கள் அனைவரும் முன்வர வேண்டும். 

நிலைமாற்ற நீதிமுறைமைகளின் கீழ் போர்க்குற்ற விசாரணைகளாவன சர்வதேச நீதிபதிகளையும் உள்ளடக்கிக் குற்றவாளிகளை அடையாளங் காண வேண்டும். நாங்கள் இராணுவத்தை ஒட்டுமொத்தமாகக் குறை கூறவில்லை. அதில் கடமையாற்றிய காவாலிகள் சிலரை அடையாளப்படுத்த வேண்டும் என்றே கேட்கின்றோம். அந்தக் காவாலிகளை வீரதீர சூரர்கள், சிங்கள மக்களின் காவல் மன்னர்கள் என்ற முறையில் மத்திய அரசாங்கத்தில் உள்ளோர் பலர் காப்பாற்ற விளைந்துள்ளார்கள். எமது நெருக்குதல்கள் காவாலிகளைக் கடைத்தெருவுக்கு இழுத்து வர வேண்டும் என்று கருதுகின்றோம். இவற்றைச் செய்ய நாம் மக்கள் இயக்கமாக ஒருங்கிணைந்து முன்னேற வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். எமது பார்வை சரியென்று கருதும் யாவரும் எம்முடைய மக்கள் இயக்கத்துடன் இணைந்து அரசாங்கத்திற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நெருக்குதல்களை ஏற்படுத்த முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உங்கள் கேள்விகளைப் பரிசீலிப்பதற்கு எழுத்து மூலமாக அவற்றைத் தருமாறு வேண்டி எனது தொகுப்பரையை முடித்துக் கொள்கின்றேன்.