லுனுகம்வெஹர தேசியப் பூங்காவில், சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவுள்ள காணியில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தங்காலை பொலிஸின் உப பிரிவான ஆபத்தான மருந்துகளைத் தடுக்கும் படையினர் லுனுகம்வெஹர தேசியப் பூங்காவில் நேற்றும் (15) நேற்று முன் தினமும் தேடுதல் வேட்டை நடத்தினர்.

இதன்போது, சுமார் நான்கு ஏக்கர் பரப்பளவுள்ள காணியில் கஞ்சா செடி பயிரிடப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். சுமார் ஏழு அடி உயரம் வரை வளர்ந்திருந்த இந்தச் செடிகளின் மொத்தப் பெறுமதி சுமார் 30 மில்லியன் ரூபா என அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

இதற்குக் காவலாக இருந்த நபரையும் பொலிஸார் கைது செய்தனர். அவரிடமிருந்த உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் தனமல்வில பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர் என்றும் பிரதான சந்தேக நபர் தப்பியோடிவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட கஞ்சாச் செடிகள் வெட்டித் தீயிலிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.